தமிழ்நாட்டில் ஃபீஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளின் விவரங்கள் குறித்து, பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொண்டு கேட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஃபீஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
அதன்பேரில், மத்திய அரசு சார்பில் ரூ. 2000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், "பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. 38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புயலின் விளைவாக 12 பேர் உயிரிழந்தனர். 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள், 2,11,139 ஹெக்டேர் விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 9,576 கிமீ சாலைகள் சேதமடைந்தன. 1,847 தொட்டிகள் மற்றும் 417 நீர்த்தேக்கங்கள் அழிந்துள்ளன. 1,649 கிமீ மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள் மற்றும் 997 மின்மாற்றிகள், 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள், 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளி கட்டிடங்கள், 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில அரசு இந்த சேதங்களின் ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொண்டது. தற்காலிக மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு 2,475 கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், இந்த பேரழிவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது. மேலும் இந்த இயற்கை பேரழிவின் வீழ்ச்சியை நிர்வகிக்க அவசர நிதி உதவி தேவை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஃபீஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“