Advertisment

சசிகலா குடும்பத்தினர் மீதான ‘படையெடுப்பு’ நோக்கம் நேர்மையற்றது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது, அரசியல் உள்நோக்கமுடையது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
IT raid, income tax department, vk sasikala, ttv dhinakaran, aiadmk, cpm, g.ramakrishnan

வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது, அரசியல் உள்நோக்கமுடையது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு.

ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் பல நாட்கள் யாருடையது என்று தெரியாமல், திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்தில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ அது எங்கள் பணம் என்று சொன்னதும், அன்புநாதன் வீட்டில் பணம் எண்ணும் “எந்திரங்கள் இருந்ததும், கோடிக்கணக்கில் பணங்கள் பிடிபட்டதும்” தமிழக மக்களின் நினைவிலிருந்து நீங்கிவிடவில்லை.

சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு, பழைய, புதிய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டன, வெள்ளி மற்றும் தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன, இப்போது சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றபட்ட பணங்கள் எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி சொல்லியிருப்பதாக மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள விபரங்களின் அடிப்படையில் வருமானவரி சோதனைகள் நடத்தப்படவில்லை என்பதும், ராமமோகன் ராவ் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனைகள் நடந்ததும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொன்னதும் அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதும், விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரிகளில் அதிரடி சோதனைகள் நடத்தி 89 கோடி ரூபாய் பணம் ஆர்.கே. நகரில் விநியோகித்ததாக சொல்லப்பட்டதும், விஜயபாஸ்கர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் அவர் நீடித்து கொண்டிருப்பதும், அவரோடு தொடர்புடைய அமைச்சர்கள் யார் மீதும் நடவடிக்கை இல்லாமல் இருப்பதும், அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தாததும், வருமான வரித்துறையினர் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது.

வருமான வரித்துறையானாலும் சரி, சிபிஐ-யானாலும் சரி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்கிற கருத்து பொதுமக்களிடம் உள்ளது. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஊழலை ஒழிப்பதில் பிஜேபிக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று நாட்டு மக்கள் அறிவார்கள். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பிறகு இன்று வரையில் லோக் பால் அமைக்க முன்வரவில்லை என்பதோடு, அமித் ஷா மகன் ஜெய் ஷா ஊழல் குறித்து மௌனம் காத்து வருவது, இந்தியா பவுண்டேசன் என்கிற டிரஸ்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகனால் நிர்வகிக்கப்படுவதும், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் இயக்குநர்களாக நீடிப்பதும், ஊழல் குறித்த மத்திய அரசின் அணுகுமுறை தன் கட்சியில் உள்ளவர்கள் எத்தனை ஊழல் செய்தாலும் அதை கண்டு கொள்ள மாட்டோம் என்பதும், இதர கட்சியில் உள்ள அனைவரையும் தங்கள் கட்சிக்கு இழுக்க, அவர்களின் செயல்பாட்டை முடக்க பயன்படுத்தப்படுவது என்பதையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்து வருமானவரி சோதனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அரசியல் நோக்கமுடைய நடவடிக்கையாக பார்க்கிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

 

It Raid Income Tax Department Ttv Dhinakaran Cpm Vk Sasikala G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment