Advertisment

கொரோனா பேஷன்ட்டுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கேன்: 'மிசஸ் ஜானகி' ஜானகி அபிஷேக் குமார்

Mrs Janaki comedy video: கொரோனா ஐ.சி.யு. வார்டில் இருக்கிற ஒருத்தரு, உங்க வீடியோவ பார்த்துதான் எங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குன்னு சொன்னார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பேஷன்ட்டுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்திருக்கேன்: 'மிசஸ் ஜானகி' ஜானகி அபிஷேக் குமார்

'Mrs Janaki' Abhishek kumar

‘ஹல்லோ... மிசஸ் ஜானகி ஹியர்!’ அண்மையில் தெறி ஹிட்டான இந்த டயலாக் குரலைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. ‘அனிமோஜி அவதார்’ மூலமாக பள்ளிக்கூட ஆசிரியையாக அவதாரம் எடுத்து, ஆன்லைன் வகுப்புகளின் அக்கப்போர்களை கலாய்த்த ‘மிசஸ் ஜானகி’ தமிழ்நாடு தாண்டியும் பேசப்படுகிறார்.

Advertisment

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவி அல்லது தலைவரும் அனுபவிக்கிற நிகழ்வுகளை வெகு இயல்பான மாடுலேஷனுடன் ஹியூமர் கலந்து பேசியதுதான் ‘மிசஸ் ஜானகி’யின் ஹிட்டுக்கு காரணம். பெண் குரலில் ஜமாய்த்த இந்த ‘மிசஸ் ஜானகி’ ஒரு இளைஞர் என்பதை அறியவே பலருக்கும் சில நாட்கள் பிடித்தது.

அந்த இளைஞரின் பெயர், அபிஷேக் குமார். சென்னையை சேர்ந்தவர். பிரசித்தி பெற்ற வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (விஐடி) பொறியியல் பட்டம் பெற்றவர். ‘ஸ்டேஜ் ஷோ’க்கள் மீது அலாதி ஆர்வம் உடையவர். பொறியாளர் பணியுடன், ‘ஸ்டான்ட் அப் காமெடி ஷோ’க்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இடையே இந்த ‘மிசஸ் ஜானகி’ ஹிட் ஆனதால், அந்தப் பெயரிலேயே இதுவரை 6 வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் லட்சக்கணக்கில் வியூஸ்! இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக ‘மிசஸ் ஜானகி’ அபிஷேக் குமாருடன் உரையாடினோம்.

எப்போ இந்த ஹியூமரை உங்ககிட்ட நீங்க உணர்ந்தீங்க?

‘காலேஜ் படிக்கும்போது டிராமாவுல ஆரம்பிச்சது இது. ஸ்டேஜ்ல ஏறி டயலாக் பேசுகையில், மக்கள் கைத்தட்டி ரசிப்பாங்க. அப்போ ஒரு சந்தோஷம் கிடைக்கும். அப்படியே ஆர்வம் ஜாஸ்தி ஆச்சு.’

காலேஜ் போறதுக்கு முன்னாடி ஸ்டேஜ் அனுபவம் எதுவும் கிடையாதா?

‘ஆமா, காலேஜில் செகண்ட் இயர்லதான் ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்க ஆரம்பிச்சேன். விஐடி கல்ச்சுரல் புரோகிராம்ஸ்தான் மேடை வாய்ப்புகளைக் கொடுத்தன. 2016-ல் படிப்பு முடிஞ்சதும், பசங்களுக்கு டிராமா சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். நானும், ‘ஸ்டான்ட் அப் காமெடி ஷோ’க்களை பண்ணினேன். இப்படி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் ‘மிசஸ் ஜானகி’ ஹிட் ஆகிடுச்சு!’

மிசஸ் ஜானகியாக அந்தப் பெண் குரல், மாடுலேஷன் எல்லாம் எப்படி அவ்வளவு பிரமாதமாக அமைஞ்சது?

‘நிறைய டிராமா பண்ணி, குரலை மாற்றிப் பழகியதுதான். மற்றபடி மிமிக்ரி எல்லாம் எனக்கு வராது. ஒரு ஆக்டரோட வாய்ஸை பண்ணச் சொன்னா, எனக்குத் தெரியாது. ஒரு டீச்சர் அல்லது 40 வயது ஆண் எனச் சொன்னா அதற்கு ஏற்ற மாதிரி குரலை மாற்ற முடியும். ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஏற்ப குரல் மாடுலேஷனை நான் செய்வேன்’

லேடி வாய்ஸ் என்றே நம்புகிற அளவுக்கு இருந்ததே?

‘கரெக்ட்! அனிமோஜி கிரியேட் பண்ணி, அந்த டிரஸ்ஸைப் போட்டதுமே அந்த கேரக்டருக்கு போயிடுறோம் இல்லையா. அந்த கேரக்டருக்கு டிரான்ஸ்ஃபார்ம் ஆனதும், ஆட்டமேடிக்கா அந்தக் குரலும், மாடுலேஷனும் வந்திடும்.’

மிசஸ் ஜானகியின் குரலும், மாடுலேஷனும் உங்கள் ஆசிரியைகளின் பிரதிபலிப்பா?

‘குறிப்பிட்ட எந்த ஆசிரியையின் மேனரிஸத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படிச் செய்தால், அது கலாய்க்கிறது போல ஆயிடும். பொதுவா நான் சந்திச்ச ஆசிரியைகளின் ரெப்ரெசன்டேஷன் மாதிரி அமைஞ்சது.

மிசஸ் ஜானகி கான்செப்டை எப்படி உருவாக்குனீங்க?

‘எஸ்.எஸ்.எல்.சி எக்ஸாம் கேன்சல் ஆனதும், என் உறவினர் வீட்டுச் சிறுவன் ஒருவன் போன் செய்தான். அவன் அதில் அடைந்த ஆனந்தம், நான் படித்த காலத்தில் இந்தத் தேர்வுக்காக உருவாக்கிக் கொண்ட பதற்றம் என இரண்டையும் மனதில் ஒப்பிட்டேன். அப்படி ஒரு பொறாமையில் உருவானதுதான் மிசஸ் ஜானகி கேரக்டர். ஆனாலும் இவ்வளவு சக்சஸ் ஆகும்னு அப்போ நினைக்கல.’

மிசஸ் ஜானகிக்கு முதல் ரீயாக்‌ஷன் எங்க இருந்து வந்தது?

‘எல்லா பக்கமும் இருந்து பாராட்டு வந்தது. எதிர்பார்க்காதவங்க எல்லாம் போன் பண்ணுனாங்க. அந்த கேரக்டர் எல்லோருக்கும் புடிச்சது. அவங்களே பார்த்த ஒரு டீச்சரா ஃபீல் பண்ணினாங்க.’

மிசஸ் ஜானகியின் அடுத்தகட்டம்?

‘ஹியூமர்தான் மக்களுக்கு புடிச்சிருக்கு. இந்த கொரோனா காலத்தில் அது ரொம்ப முக்கியம். அதில் ஏதாவது மெசேஜ் சொல்ல முடிந்தால், சொல்லவேண்டும். வாராவாரம் என்ன தோணுதோ, அதைப் பண்ணணும். இதுதான் சொல்லவேண்டும் என திட்டமிடவில்லை.’

மிசஸ் ஜானகிக்கு முன்பு, மிசஸ் ஜானகிக்கு பின்பு... அபிஷேக் குமாரின் லைஃப் எப்படி மாறியிருக்கு?

‘வாரத்துக்கு 2 காமெடி ஷோ, இப்போ ஆன்லைனில் பண்ணிகிட்டிருக்கேன். மிசஸ் ஜானகிக்கு முன்பு அந்த ஷோக்களுக்கான டிக்கெட்டை நான் பலரிடம் கேட்டு, கேட்டு விற்க வேண்டியிருந்தது. இப்போ அப்படி அவசியமில்லாத அளவுக்கு என்னை மக்களிடம் ரீச் பண்ணியிருக்கு மிசஸ் ஜானகி. போன தடவை ஆன்லைனில் போட்டு 5 மணி நேரத்துல 2 ஷோக்களுக்கும் டிக்கெட் போயிடுச்சு’

என்ன மாதிரியான மெசேஜை, ஷோக்களில் இன்னும் சொல்லணும்னு நினைக்கிறீங்க?

‘என்னை மாதிரியான ஆட்கள் நாம அன்றாடம் பார்க்கிற நிகழ்வுகளை அப்படியே ஜாலியா சொன்னாத்தான் மக்கள் விரும்புவாங்கன்னு நினைக்கிறேன். சோசியல் மெசேஜ் சொல்லலாம். அதை மிசஸ் ஜானகியில அப்பப்போ சேர்த்துக்க வேண்டியதுதான்.’

கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றும் மிசஸ் ஜானகி மூலமா பண்ணியிருந்தீங்களே?

‘ஜானகி கேரக்டரை பார்த்துட்டு, அதிமுக ஐ.டி. விங்க் கேட்டாங்க. அது இப்போ ரொம்ப தேவையான மெசேஜ். மாஸ்க் எப்படி போடணும்னே தெரியாம நிறைய பேரு சுத்திகிட்டிருக்காங்க. அவங்களுக்கு மெசேஜ் போட்டா, போய்ச் சேரும்னு நினைச்சேன். நிறைய பேருக்கு போய்ச் சேர்ந்திருக்கு.’

மிசஸ் ஜானகிக்கு கிடைத்த பல பாராட்டுகளில் முக்கியமானதா எதை நினைக்கிறீங்க?

‘சென்னை விருகம்பாக்கத்தில் நான் படித்த ‘பாலலோக்’ பள்ளி பிரின்சிபால் பேசினார். ஸ்கூல்ல படிச்ச காலத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. இப்போ அவங்களே பேசினப்போ, ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

அதேபோல கொரோனா ஐ.சி.யு. வார்டில் இருக்கிற ஒருத்தரு, உங்க வீடியோவ பார்த்துதான் எங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குன்னு சொன்னார். அதுவும் மனசுக்கு திருப்தியா இருந்தது’ என்கிறார், அபிஷேக் குமார்.

கலைத்துறைக்கு பிரகாசமான புதிய வரவாக அபிஷேக் அமைவார் என எதிர்பார்க்கலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment