முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் தொடக்கம்: நடிகர் ரஜினி, கமல் பங்கேற்பு

முரசொலி பவள விழா வாழ்த்தரங்க விழாவில், நடிகர் ரஜினி, நடிகர் கமல்ஹாசன், பல்வேறு நிறுவன பத்திரிகை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முரசொலி பவள விழா வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. விழாவில், நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு நிறுவன பத்திரிகை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 1942-ஆம் ஆண்டு “முரசொலி வெளியீட்டுக் கழகம்” என்ற பெயரில் பதிப்பகம் துவங்கிய கருணாநிதி, அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி “முரசொலி” என்ற மாத இதழை துவக்கினார். மாத இதழ் என்றாலும் அது ஒரு துண்டறிக்கை போன்றே வெளியிடப்பட்டது. பின் வந்த நாட்களில் தினசரி நாளிதழாக வெளியிடப்பட்ட முரசொலி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக திகழ்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த முரசொலி, தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு பவள விழாவுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

முரசொலி பவள விழாவையொட்டி, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழாவின் வாழ்த்தரங்கம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் உதயநிதி ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் செல்வம், கவிஞர் வைரமுத்து, தி ஹிந்து என்.ராம், நக்கீரன் கோபால், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சொந்தாலியா, தினமலர் ஆசிரியர் ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆசிரியர் அருன்ராம், ஆனந்த விகடன் குழும மேலான் இயக்குனர் சீனிவாசன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினத்தந்தி, தினகரன் ஆசிரியர், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஆரம்பித்ததும் சிறிது நேரம் கழித்து விழா அரங்குக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close