முரசொலி பத்திரிக்கை:
திமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான். முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார்.ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்தது கருணாநிதியின் கடின உழைப்பால் பத்திரிக்கையாக மாறியது.
கலைஞர் எண்ணத்திலும் சிந்தனையில் இருப்பது முரசொலியில் எழுத்தாக வெளிவரும். முரசொலியில் இடம்பெற்ற கருணாநிதியின் எழுத்துக்கள் எத்தனையோ அரசியல் விவாதிற்கு ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. கருணாநிதியின் ஒவ்வொரு எழுத்தும் முரசொலியில் திமிறி நடை போட்டது.
முரசொலி ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகை இல்லை. அது தலைவன்-தொண்டர்களிடையேயான உணர்வுள்ள உறவுப்பாலம் என்று மேடையில் உணர்ச்சியுடன் பதிவு செய்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அந்த உறவு பாலம் தான் தற்போது அவரின் தலைமாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதியின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவரின் தலைமாட்டில் முரசொலி பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நீண்ட ஓய்வை பார்த்து அதுவும் ஒரு ஓரத்தில் அழுதுக் கொண்டிருக்கிறது.
மரணத்தில் தனது மகன் தன்னுடனே வருவதை எந்த தந்தையும் விரும்ப மாட்டார். ஆனால் தனது முதல் குழந்தை தன்னுடன் வருவதைக் கண்டு கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருப்பார் கலைஞர்.