scorecardresearch

ஒரு ஸ்பெஷல் அருங்காட்சியகம்… மெரினா போறவங்க இதை மிஸ் பண்ணாதீங்க!

வீட்டில் யார் உதவியும் நாடாமல் செயல்படுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு ஸ்பெஷல் அருங்காட்சியகம்… மெரினா போறவங்க இதை மிஸ் பண்ணாதீங்க!
அனைத்தும் சாத்தியம் – மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் (Photography – Janani Nagarajan)

சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அருங்காட்சியகம் “அனைத்தும் சாத்தியம்”, மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்திலும், அவர்கள் இதுவரை கண்டிடாத உதவி சாதனங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

தாக்கங்களின் பதிவுகள் – அனைத்தும் சாத்தியம் (Photography – Janani Nagarajan)

லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரால் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில், ஊன்றுகோல்களில், இயந்திரமயமாக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில், நடைபயிற்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் வருகைத்தரும் போது, நுழைவாயிலில் சாய்வான சிவப்பு வழி மூலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒலி இயக்கிகள் – அனைத்தும் சாத்தியம் (Photography – Janani Nagarajan)

ஜூன் மாத தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், பயனாளிகளுக்கு சாதனங்களைக் கற்கவும் பயன்படுத்தவும் உதவுவது மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைப் புரிந்துகொள்வதற்கு பார்வையாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் கைவினைப் பொருட்கள் (Photography – Janani Nagarajan)

அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவிற்கு வருகைதந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க 62.5 கோடி ரூபாயை அரசாங்கம் அனுமதித்துள்ளது. 37,660 பயனாளிகளுக்கு 70.8 கோடி ரூபாய் மதிப்பிலான உதவி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 1,228 ஸ்கூட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. 360.2 கோடி ரூபாய் செலவில் 2.1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் கருவிகள் – அனைத்தும் சாத்தியம் (Photography – Janani Nagarajan)

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகளை வலியுறுத்துகிறேன். அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள, இந்த துறையின் மூலம் வழக்கமான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்”, என்று கூறினார்.

தனிப்பயனாக்கப்பட்ட கலை பொருட்கள் – அனைத்தும் சாத்தியம் (Photography – Janani Nagarajan)

இந்த அருங்காட்சியகத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், முச்சக்கரவண்டி, செவிப்புலன் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களுக்கு உதவும் யு-ரீட் கருவி (Photography – Janani Nagarajan)

நுழைவு வாயிலில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளாக தங்களின் வாழ்க்கையில் தடைகளை தகர்த்து வெற்றிப்பெற்றவர்களின் பட்டியலையும் அவர்கள் கடந்துவந்த வரலாற்றையும் “தாக்கங்களின் பதிவுகள்” மூலம் கூறுகின்றனர்.

தொட்டுணரக்கூடிய விளையாட்டு சாதனங்கள் (Photography – Janani Nagarajan)

மேலும், மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு சார்பற்ற அமைப்பு (விருத்தி – மாற்றுத்திறனாளிகளின் கைவினைப் பொருட்கள்) போன்றவை உருவாக்கும் கலை மற்றும் கைவினை பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். அருங்காட்சியகம் செல்லும் மக்கள் அப்பொருட்களை வாங்க நினைத்தால், அதற்கு தொடர்புடைய அமைப்புகளுடன் அவர்களை தொடர்பு படுத்திக்கொள்ள உதவுகிறார்கள்.

அணுகும்தன்மை உடைய இசைக்கருவிகள் (Photography – Janani Nagarajan)

மேலும், தொட்டுணரக்கூடிய விளையாட்டுச் சாதனங்கள் ( Tactile games ), செவித்திறன், பார்வை மற்றும் இதர குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், கைத்தொழில் கருவிகள் (Handwork tools) மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கலை பொருட்கள் ஆகியவை மக்களின் விழிப்புணர்வுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடர்பு சாதனங்கள் (Photography – Janani Nagarajan)

மாற்றுத்திறனாளி மக்கள் சுதந்திரமாக யாரையும் சாராமல் இருக்க உதவும் பல்வேறு தழுவல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வரவேற்பறை – வீட்டின் மாதிரி (Photography – Janani Nagarajan)

மேலும், கல்வி கற்பதற்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்று தொடர்பு, கணினி அணுகுதலுக்கான உதவி தீர்வுகள், சுயாதீன வாழ்க்கைக்கான பயன்பாடுகள் மற்றும் மென்பொருள் மற்றும் ஸ்கேன் செய்து படிக்கும் தொழில்நுட்பம் ஆகியவை மக்களிடையே விழிப்புணர்வு அளிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

சமையலறை – வீட்டின் மாதிரி (Photography – Janani Nagarajan)

இந்த அருங்காட்சியகத்தில் (Live, Work & Play) என மூன்று தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வீட்டில் தேவைப்படும் மிக முக்கியமான வசதிகளை அடக்கியதாகும். வீட்டின் அமைப்பில் (ஹால், சமையலறை, படுக்கையறை மற்றும் குளியலறை) அமைக்கப்பட்டிருக்கும் இந்த தளம், வீட்டில் யார் உதவியும் நாடாமல் செயல்படுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இந்த காட்சிப்படுத்தல் இருக்கிறது.

படுக்கையறை – வீட்டின் மாதிரி (Photography – Janani Nagarajan)

மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர் பவித்ரா சுவாமிநாதன் கூறியதாவது: 

“இந்த அருங்காட்சியகம் மக்களிடையே மாற்றுத்திறனைப் பற்றியும் மாற்றுத்திறனாளிகளை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். மக்களுக்கு இதனைப் பற்றி பெரிதாகத் தெரிவதில்லை. இது மக்களின் மத்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று கூறுகிறார்.

குளியலறை – வீட்டின் மாதிரி (Photography – Janani Nagarajan)

நாம் வாழ்கின்ற இந்த தொழில்நுட்ப நூற்றாண்டில், பல கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்த உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக மக்களிடையே மாற்றுத்திறனாளிகளுக்காக பரந்து கிடக்கும் சந்தர்ப்பங்களை அறிமுகப்படுத்தும் தமிழக அரசின் இந்த முயற்சி பாராட்டிற்குரியது.

Sensory Garden – வீட்டின் மாதிரி (Photography – Janani Nagarajan)

இந்த அருங்காட்சியகம் புதன் முதல் திங்கள் வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், செவ்வாய்கிழமை விடுமுறையாக கருதப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Museum of possibilities a must visit place at chennai