மாணவி அனிதா தற்கொலை செய்து கொள்வது என்ற கடுமையான முடிவை எடுக்கும் முன்னர் எவ்வளவு கடுந்துயரை அனுபவித்திருப்பார் என நினைக்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்களும், 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதாவின் உயிரிழப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனிதாவின் தற்கொலைக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அனிதாவின் மரணத்தையடுத்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனிதாவின் குடும்பத்துக்கு எந்த விதமான உதவியையும் செய்ய தயார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இத்தகைய கடுமையான முடிவை எடுக்கும் முன்னர் மாணவி அனிதா எவ்வளவு கடுந்துயரை அனுபவித்திருப்பார் என நினைக்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் மூலம் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், "மாணவி அனிதாவின் மரணம் துரதிருஷ்டவசமானது. இத்தகைய கடுமையான முடிவை எடுக்கும் முன்னர் அவர் எவ்வளவு கடுந்துயரை அனுபவித்திருப்பார் என நினைக்கும் போது நெஞ்சம் வேதனை அடைகிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.