Advertisment

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை... மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என சீமான் எச்சரிக்கை!

மாடுகளை வாங்கி வளர்த்து விற்று வருமானமீட்டி வாழ்க்கை நடத்தும் பல கோடி விவசாயிகள் இந்தத் தடையினால் வறுமையில் தள்ளப்படுவார்கள்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajasthan

Lynching attacks in Rajastan

மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்படும் தடையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு தேசிய இனத்திற்கென்று தனித்தன்மையான பண்பாட்டு விழுமியங்கள் உண்டு. பன்னெடுங்காலமாகத் தனது தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள அவ்வினங்கள் நடத்திய போராட்டமே உலக வரலாறாக விரிந்து கிடக்கிறது.

இந்திய ஒன்றியத்திலும் பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழ்ந்து வருகிறது. ஆனால், பாஜக அரசானது ஆட்சிபீடத்தில் ஏறியது முதல், தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்திட பல்வேறு திட்டங்களினால் காய்நகர்த்தி வருகிறது. அதில் ஒன்றுதான் நமது உணவுப்பழக்க வழக்கத்தில் திணித்து இருக்கிற கட்டுப்பாடுகள். குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை அடியோடு தடைசெய்யும் விதமாக மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடை.

ஒரு சமூகத்தின் உணவுப்பழக்க வழக்கம் என்பது அச்சமூகம் வாழ்கின்ற இடம், பருவநிலை, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வரலாற்றுத் தொடர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. ஒரு அரசோ, சட்டங்களோ தீர்மானிக்க இயலாத அல்லது தீர்மானிக்கக் கூடாத தனிமனிதனின் அடிப்படை சுதந்திரமான உணவுப்பழக்கவழக்கத்தில் தனது கருத்தை அல்லது தத்துவத்தைத் திணிக்க முயல்வதன்மூலம் பாஜக அரசின் பாசிசமுகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் ஜல்லிக்கட்டுக்குத் தடை போட பல்வேறு வழியில் முயற்சித்துக் கடைசி வரை முரண்டு பிடித்த பாஜக இந்தத் தடையை ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு தொடர்புபடுத்தித் திசை மாற்றுவது மோசடித்தனமானது. இத்தடை தனிமனிதனின் அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல விவசாயிகளுக்கும் எதிரானது. மாடுகளை வாங்கி வளர்த்து விற்று வருமானமீட்டி வாழ்க்கை நடத்தும் பல கோடி விவசாயிகள் இந்தத் தடையினால் வறுமையில் தள்ளப்படுவார்கள். விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தில் திகழும் இந்திய நாட்டின் இச்செயலானது மக்களிடையே பெரும் குழப்பத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாட்டிறைச்சியில் அரசியல் செய்ய விரும்பும் பாஜக அரசின் இவ்வகை இந்துத்துவச் செயல்கள் உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவான, ஏகபோக நலன்களை உள்ளடக்கிய ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம், ஒரே நாடு போன்ற சர்வாதிகார அம்சங்களை வளர்த்தெடுக்கிற மதத் தீவிரவாதப் போக்காகும்.

இந்நாட்டில் வாழும் பலகோடி மக்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள். சாதி, மதப் பிரிவினைகளுக்கெல்லாம் அப்பால் பலராலும் கடைப்பிடிக்கப்படும் உணவுப் பழக்கவழக்கத்தை ஒழித்துக் கட்ட நினைப்பதன் மூலமாகப் பாஜக தன்னை இயக்குகின்ற கரமாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவை நிறைவேற்ற முயல்கிறது என்பது தெளிவாகிறது.

மேலும், ஒட்டகக்கறி மீதானக் கட்டுப்பாடு இந்நாட்டின் பூர்வக்குடிகளான இசுலாமிய மக்களின் பண்பாட்டின் மீதானத் தாக்குதலாகும். இதுபோன்ற செயல்கள் மூலமாகப் பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மத உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறது. இதனை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பல்வேறு மத வழிபாடு கொண்ட மக்களின் உணர்வுகள் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதலாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

எனவே, மத்திய அரசானது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களில் கைவைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதை ஜனநாயகம் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டிய காலத்தேவை பிறந்திருக்கிறது. மத்திய அரசானது இத்தடைச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று வெகுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையேல், இதுபோன்ற தடைகளைத் தகர்த்தெறிய மிகப்பெரும் மக்கள்திரள் போராட்டங்களை நாம் தமிழர் கட்சியானது முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment