“மாணவி அனிதா மரணத்திற்கு பாஜக மட்டுமல்ல, முந்தைய காங்கிரஸ் ஆட்சியும் தான் காரணம்”: சீமான் கடும் சாடல்

”அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மாணவர்களின் நிலையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை”, என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

By: Updated: September 2, 2017, 12:29:16 PM

”அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மாணவர்களின் நிலையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை”, என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, வெள்ளிக்கிழமை தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததால், பிளஸ் டூ தேர்வில் 196.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவ படிப்பில் இடம் பெற முடியவில்லை. இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் குறிப்பிடத்தக்கது. தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என்ற மன வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலையில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, அனிதாவின் உருவப்படத்துக்கு போராட்டக்காரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”மாணவி அனிதா எடுத்த மதிப்பெண்களுக்கு எந்த பணிகளுக்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். ஆனால், சிறு குழந்தை முதலே கண்டிருந்த மருத்துவர் கனவு சிதைந்துபோனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவர் கனவை அவ்வளவு காதலித்திருக்கிறார். இதுவும் ஒரு காதல் தோல்வி போன்றதுதான். அவருக்கு ஆறுதல் சொல்ல அம்மாவும் இல்லை. அப்பா ஒரு கூலி தொழிலாளி. அவரால் என்ன செய்ய முடியும்? 1176 மதிப்பெண்களைவிட மருத்துவம் படிக்க வேறென்ன தகுதி வேண்டும்? அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழக மாணவர்களின் நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.”, என கூறினார்.

மாணவி அனிதா உச்சநீதிமன்றத்திற்கு செல்ல யாரேனும் தூண்டினார்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அப்படி தூண்டிவிட்டால் அது நியாயம்தானே. அவளுக்காக மட்டுமில்லை. மற்றவர்களுக்காகவும் தானே உச்சநீதிமன்றம் சென்றார். அப்படி யாராவது அனிதாவை உச்சநீதிமன்றம் செல்ல தூண்டியிருந்தால், அவரை விட சமூக போராளி வேறு யார் இருக்க முடியும்? அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும்.”, என தெரிவித்தார்.

மேலும், ”மாணவி அனிதாவின் மரணத்திற்கு பாஜக மட்டுமல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சி, அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக என அனைவரும் தான் காரணம். ஜி.எஸ்.டி., நீட், உணவு பாதுகாப்பு சட்டம் என எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டது காங்கிரஸ். அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. பாஜகவுக்கு இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை இருப்பதால் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறது.”, என தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Naam thamizhar party chief co ordinator seeman accused congerss party for student anithas suicide

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X