ஆர்.கே.நகர் தொகுதி முறைகேடு வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களையும் சேர்த்து அவற்றை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி அளிக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆணையத்தின் இந்த ஜனநாயக விரோத நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல் ஊழல்களில் மிக மோசமானது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்தான். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், அந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன என்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஊழல்களுக்கும் தாய் தேர்தல் ஊழல்தான். எனவே, அந்த ஊழல் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக ஆர்.கே.நகர் தொகுதி முறைகேடு வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களையும் சேர்த்து அவற்றை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.