நக்கீரன் கோபால் மீது மட்டுமல்ல, நக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது பாய்ந்த செக்ஷன் 124, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆளுனர் மாளிகையின் இந்த அம்பு முறிந்தது எப்படி?
நக்கீரன் கோபால் நேற்று (அக்டோபர் 9) சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்டில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை, அருப்போட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புபடுத்தி நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கமாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளுக்கு அவதூறு வழக்கு தொடரப்படும். ஆனால் மேற்படி செய்திக்காக இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் படி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஒரு செய்திக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருப்பது இதுவே முதல் முறை!
அது என்ன செக்ஷன் 124? இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுனர்களுக்கு அரசியல் சாசனம் விசேஷ உரிமைகளை வழங்கியிருக்கிறது. அவர்களது கடமைகளை செய்ய விடாமல் பணிகளை இடையூறு செய்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு நாகையில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக.வினர், கொடிகளை ஆளுனர் கார் மீது வீசினர். அந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கான திமுக.வினரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஆளுனர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுப்பது, செக்ஷன் 124-ன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம்’ என எச்சரிக்கையாக குறிப்பிட்டது. அதே செக்ஷனில்தான் இப்போது நக்கீரன் மீது நடவடிக்கை பாய்ந்தது.
நக்கீரன் கோபால் மீது மட்டுமல்ல, நக்கீரன் குடும்பத்தில் பொறுப்பாசிரியர் கோவி லெனின் மற்றும் துணை ஆசிரியர்கள், நிருபர்கள் என 35 பேர் மீது ஒரே எஃப்.ஐ.ஆரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆளுனர் மாளிகை துணை செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை ஜாம் பஜார் போலீஸார் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
நேற்று பிற்பகலில் நக்கீரன் கோபாலை சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது நக்கீரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுத்த செக்ஷனில் வழக்குப் பதிவு செய்திருப்பது செல்லாது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டனர். ‘ஆளுனரின் எந்தப் பணியை நக்கீரன் தடுத்தது?’ என்கிற கேள்வியையும் எழுப்பினர்.
அப்போது நீதிமன்றம் வந்திருந்த இந்து என்.ராம் ஊடகப் பிரதிநிதியாக தனது கருத்துகளை முன்வைக்க மாஜிஸ்திரேட் அனுமதித்தார். கீழமை நீதிமன்றம் ஒன்றில் இப்படி வழக்கறிஞராக அல்லாமல் ஊடகப் பிரதிநிதியாக ஒருவரை பேச அனுமதித்தது இந்தியாவில் இது முதல் முறை என்கிறார்கள்.
இந்து ராம் கூறுகையில், ‘செக்ஷன் 124-ன் கீழ் பத்திரிகை மீது நடவடிக்கை எடுப்பது சரியல்ல. இது இந்தியா முழுமைக்கும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்றார் ராம். பின்னர் நீதிமன்றமும் இந்த செக்ஷன் அடிப்படையில் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டது.
Nakkeeran Gopal Arrest: நக்கீரன் குடும்பத்தில் 35 பேர் மீது செக்ஷன் 124-ல் நடவடிக்கை
எனவே நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுனர் மாளிகையே கொடுத்த புகார் அடிப்படையில் நடந்த ஒரு கைது, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.