வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (ஜன.29) ஈரோடு மரப்பாலத்தில் (பேபி மருத்துவமனை அருகில்) நடைபெற்றது.
அப்போது சீமான், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா என்பவரை அறிவித்தார். முன்னதாக, “மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காண்கிறோம்” என்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
அதிமுக, பாஜக கூட்டணி சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனினும் பாஜக மற்றும் அதிமுக சார்பில் தனித்தனி தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக தரப்பில் 106 பேர்கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம். எல்.ஏ. வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமுருகன் ஈ.வெ.ரா ஜனவரி மாதம் 4-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/