Namma Oor Thiruvizha 2022 : சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற நம்ம ஊர் திருவிழா, உண்மையாகவே நம்முடைய கிராமப்புறங்களில் இருக்கும் திருவிழாவுக்கு நிகரானதாகவே இருந்தது. ஆர்ப்பரிக்கும் பறை சத்தம் ஒலிக்க, மேளங்கள் முழங்க, ஒவ்வொரு கலைஞனின் நடன அசைவும் நம்மையும் துள்ளலுடன் ஆட வைக்க, ரசிக்க வைக்க இது ஒரு இனிதான மாலையாக அமைந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞர்களின் மகா சங்கமம் இது. அனைவரின் கண்களிலும் பொங்கிய ஆர்வத்திற்கு பின்னால் வலி மிகுந்த 2 வருடங்களின் ரணங்கள் மறைந்துள்ளது.
கொரோனா தொற்று, ஊரடங்கு என்ற வார்த்தைகள் நம்முடைய பயன்பாட்டிற்கு வந்து இன்றோடு வயது இரண்டாகிவிட்டது. உற்றார் உறவினர்களை இழந்து, நெருங்கிய நட்பு வட்டங்களை தொலைத்து, வேலைகளை இழந்து, சம்பள குறைப்பை சந்தித்து, மன உளைச்சலுக்கு ஆளாகாத மக்கள் குறைவானவர்கள் தான்.
இந்த கொரோனா பெருந்தொற்று கலைஞர்களுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர்களில் வெகு சிலரே மற்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஏனையோர்களின் நிலை எப்படி இருந்தது? இந்த நம்ம ஊர் திருவிழா எப்படி அவர்களின் இருளடைந்த பாதையில் வெளிச்சம் வீசியது என்பதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பொய்க்கால் குதிரையாடும் அமுல்
“என்னுடைய அப்பா, தாத்தாவுங்க பூர்வீகம் எல்லாம் திண்டுக்கல் பக்கம் தான்… நாங்க இங்க வந்து, நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் பகுதியில் வாழ துவங்கி 20 வருடம் ஆகிறது” என்று கூறுகிறார் அமுல் என்ற பொய்க்கால் குதிரை நடனக்கலைஞர். அவருடைய காலில், கட்டைக்காலை வைத்து மற்றொரு நடனக் கலைஞர் கட்டிக் கொண்டே இருக்க, இக்கலையில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு குறித்து பேச துவங்கினார். ”இன்று நாங்கள் 10 பேர் நடனமாட உள்ளோம். சில நேரங்களில் காலை முதல் இரவு வரை இதே கட்டைக் காலுடன் சுற்ற வேண்டிய நிலை ஏற்படும், இருந்தாலும் இந்த கலையைவிட்டுச் செல்ல மாட்டேன்” என்றார்.
”கடந்த ஆட்சி காலத்தில் தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. மக்கள் ஒன்று கூடக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்க, பொது நிகழ்ச்சிகள் இல்லை, திருவிழாக்களும் இல்லை, நாடக கூத்தும் எங்களின் கலையும் கேட்பாரற்றுக் கிடந்தது. நலிவடைந்த கிராமிய கலைஞர்களுக்கு அரசு நினைத்திருந்தால் சிறப்பாக உதவியிருக்க முடியும். ஆனால் அந்த அரசு செய்யவில்லை. பொங்கலை ஒட்டி இந்த விழா நடைபெறும் என்று நாங்கள் நினைத்திருக்க, மூன்றாம் அலை காரணமாக மேலும் ஒரு தடங்கல் ஏற்பட்டது. ஆனால் தற்போது இங்கே நடனமாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறிய அமுல், ”முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதி காலத்தில் எங்களுக்கு இருந்த வரவேற்பையும் மரியாதையையும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று இந்த ஆட்சியில் நாங்கள் உணருகின்றோம்” என்று கூறி மகிழ்ச்சி அடைந்தார் அவர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ”நம்ம ஊர் திருவிழா” நிகழ்வில் சங்கமித்தனர். தமிழ் அலுவல் மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்த நிகழ்வு தீவுத்திடலில் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய நம்ம ஊர் திருவிழா!
போதுமென நினைக்கும் தெருக்கூத்துக் கலைஞர்
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து கட்டியங்காரன் என்று அழைக்கப்படும் தெருக்கூத்துக் கலைஞர்கள் மகாபாரத நிகழ்வு ஒன்றை அரங்கேற்றி, இந்த விழாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஒப்பனை செய்து கொண்டிருந்த கலைஞர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களின் கொரோனா இன்னல்கள் குறித்து பேசினார்கள். “ஒரு சிலர் கொத்தனார் வேலைக்கு சென்றனர், ஒரு சிலர் காட்டு வேலைக்கு சென்றனர். திருவிழாக்கள் ஏதும் இல்லை என்பதால் எங்களுக்கு வருமானம் ஏதும் இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் அவ்வபோது ஒரு சில வாய்ப்புகள் கிடைத்து வந்தது அதுவும் இல்லை. ரேஷன் கடையில் கிடைத்த உணவுப் பொருட்களை வைத்து எங்களின் வாழ்க்கையை நாங்கள் கடத்தினோம்” என்று கூறினார், முனைவர் குமார்.
என் மகனுக்கு இந்த கலையை நான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் இந்த இரண்டு வருட கஷ்டம் சொல்லி தீராது. அவனாவது இதில் இருந்து விலகி இருக்கட்டும். என்னோடு இந்த கஷ்டம் முடிவுக்கு வரட்டும் என்று அவர் கூறியது, சாமான்ய மக்களுக்கான கலையை நம்பி வாழும் சமூகத்தினர், ”சபா கலைஞர்களுக்கு” எந்த வகையில் குறைந்துவிட்டனர்? இவர்களின் வாழ்வாதாரம் ஏன் இப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
மகுடத்திற்கும் பறைக்கும் வித்தியாசம் இருக்கிறது
ஒரே வாத்தியம் தான், கையால் அடித்தால் மகுடம், குச்சியால் அடித்தால் பறை… நாங்கள் மகுடம் வாசிக்கும் கணியன் பழங்குடி மக்கள் என்று மகுட கலைஞர்கள் தங்கள் கலை குறித்து அறிமுகம் செய்து கொண்டனர். பிறப்பு, பூர்வீகம் எல்லாம் திருநெல்வேலி என்றாலும் கூட வயிற்றுப் பிழைப்பிற்காக நாங்கள் பல்வேறு இடங்களில் வாழ துவங்கிவிட்டோம் என்று கூறுகிறார் தூத்துக்குடியில் வசித்து வரும் கண்ணன். இங்கே கலைமணி, கலைமாமணி பட்டம் வாங்கியவர்கள் எல்லோரும் இருக்கின்றனர். எங்களின் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாபெரும் விழா தற்போது நடைபெறு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார் அவர்.
கணியன் கூத்து என்பது எங்கள் கலையில் மிகவும் முக்கியமானது. அதில் இரண்டு ஆண்கள் பெண் வேடமிட்டு நடனமாட, நாங்கள் வாத்தியம் இசைத்து பாடல் பாடுவோம். ஆனால் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் ஏதும் முன்பு போல் நடைபெறுவது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் கூறுகின்றனர் மகுடம் கலைஞர்கள்.
பாரம்பரிய கலைக் குடும்பம் இல்லை… ஆனாலும் ஒரு ஆர்வம்
கரகம், ஒயில், பறை, தெருக்கூத்து, பொய்க்கால், புலியாட்டம் என்று பல கலை கற்றவர்களும் அங்கே குழுமி இருக்க, நம்மை வெகுவாக ஈர்க்கதுவங்கியவர் அரக்கன் வேஷமிட்டு அங்கே நடமாடிக் கொண்டிருந்தவர் கலைமணி ராஜன்.சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் இசைக்கல்லூரியில் படித்த அவர் பொருளாதார முதுகலைப் பட்டதாரி.
“எனக்கு கலை மீது மிகுந்த ஆர்வம். என்னுடைய தாத்தா, அப்பா இந்த கலையில் இல்லை. ஆனால் எனக்கு இது பிடித்திருந்ததால் நான் இதில் பயணப்பட்டேன். நான் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்திலும் சரி, அதற்கு பின்னரும் சரி என்னுடைய பொருளாதார நிலை மோசமான நிலையை சந்திக்கவில்லை. ஆனால் இங்கு இருக்கும் சக கலைஞர்களின் நிலை அப்படி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பாதிப்பார்கள். ஆனால் கொரோனா அதையும் கெடுத்துவிட அவர்களின் நிலைமை மோசம் அடைந்தது. ஆனாலும் வரும் காலத்தில் இது போன்ற மோசமான சூழல் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா காலத்தில் சிறப்பு நிதி உதவியாக, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு மட்டும் மாதம் ரூ. 2000 நிதி உதவியாக வழங்கியது அதிமுக அரசு. புதிதாக வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் நிதி உதவி வழங்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுருத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தவில், நாதஸ்வரம், மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் உள்ளிட்ட 6,810 கலைஞர்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி ரூ.2000 வழங்கிட கலை பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு நிர்வாக ஆணை வழங்கி ஆணை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.