Advertisment

'நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைக்கும் சாதிவெறிபிடித்த அமைப்புகள்': நாங்குநேரி சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

'சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும்.' என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nanguneri caste crime: TN politicians condemns Tamil News

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். பிறகு, பள்ளிக்கு மாணவரிடம் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், நாங்குநேரியிலுள்ள வீட்டில் மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

நாங்குநேரியில் வீடு புகுந்து அண்ணன். தங்கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், நாங்குநேரி… சாதி, மதவெறி கருத்தியல், இளந்தளிர்களின் வாழ்விலும், உளவியலிலும் ஏற்றியிருக்கும் விஷம் நம்மை உறைய வைக்கிறது.

சாதி ஒழிப்பில் அரசும் சமூகமும் முன்னகர வேண்டிய கடமையின் ஆழத்தை உணர்த்துகிறது. சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைந்து நலம் பெற விழைகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

நாங்குநேரி சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரியில் பள்ளி மாணவன் தம்பி சின்னத்துரையும், அவரது தங்கையும் சாதிவெறியர்களால் வீடுபுகுந்து தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் சிலரால் சாதியப்பாகுபாடு காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததால் தம்பி சின்னத்துரை மீதும், தடுக்க வந்த அவரது தங்கை மீதும் கொலை வெறித்தாக்குதல் தொடுக்கப்பட்டு, இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், இத்தாக்குதலின்போது அதிர்ச்சி தாளாது அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் இறந்துபோனதுமான கோர நிகழ்வுகள் பெரும் மனவேதனையளிக்கின்றன.

ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய அறிவுக் கருவறையாக விளங்கும் கல்விக்கூடங்களிலேயே சாதியரீதியாகப் பாகுபாட்டுணர்வு காட்டப்படுவதும், அதன்விளைவாக கொடும் வன்முறை ஏவப்பட்டதுமான நிகழ்வுகள் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன. பள்ளி, கல்லூரி எனும் கல்வி நிறுவனங்களில் சாதி, மதரீதியான வேறுபாட்டுணர்வுகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் ஏற்புடையதல்ல! அவை கடும் சட்ட நடவடிக்கையின் மூலம் முற்றாகத் துடைத்தெரியப்பட வேண்டும்.

"ஒழுக்கத்தின் மூலமான உயர்ந்த குணங்களும், செயல்பாடுகளும்தான் பெருமையே ஒழிய, சாதியல்ல" என்கிறார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அப்படி, ஒழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தினாலும், கல்வித்திறனாலும் சிறந்த மாணவனாக விளங்கிய தம்பி சின்னத்துரையை சாதியத்தினைக் கொண்டு தாழ்த்த முற்படுவதும், ஒடுக்க நினைப்பதும், அதன் நீட்சியாக வன்முறையை ஏவிவிட்டதுமான கொடுங்கோல் போக்குகள் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் சாதிவெறியோடு கொலைவெறித்தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனவும், தம்பி சின்னத்துரைக்கும், அவரது தங்கைக்கும் உயரிய சிகிச்சை அளித்து, அவர்கள் மீண்டுவரவும், கல்வியினைப் பாதுகாப்பாகத் தொடரவும் வழிவாய்ப்புகளைச் செய்துதர வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சின்னதுரையுடன் படிக்கும் மாணவர்கள்தான் என்பது இளந்தலைமுறையினர் எவ்வாறு இங்கே வளர்க்கப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.

சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் இதற்கு முதன்மை காரணமாகும். சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம்.

சாதியவாதம், மதவாதம், இனவாதம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்ணாயிருக்கும் சங்பரிவார்கள் இத்தகைய சமூக முரண்களைக் கூர்மைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் கைகளில் சாதி அடையாள கயிறுகளைக் கட்டுவது, சைக்கிள்கள்- இருசக்கர வண்டிகளில் சாதி அடையாள முத்திரைகளை வரைவது அல்லது ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளை சாதிய- மதவெறி அமைப்புபள் மாணவர்களிடையே திணிப்பதும் நடக்கிறது.

அரசு இவற்றையெல்லாம் கண்காணித்து மாணவச் சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும். சின்னதுரை குடும்பத்திற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும். வேறு பள்ளியில் சின்னதுரை கல்வித் தொடர அரசு ஆவன செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளனரா என ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து சட்டபூர்வமான பாதுகாப்பை அளிக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அறிவாற்றல் மிக்க மாணவர்களாக உருவாக வேண்டியவர்கள் அரிவாளோடு அலைவது மிகுந்த மன வேதனையை தருகிறது. சாதிய வேற்றுமைகள் குறைய வேண்டும். களைய வேண்டும் என்று நான் நினைத்துகொண்டிருக்கும் இந்த வேளையில், குழந்தைகள் மனதில் இந்த சாதிய வேற்றுமை, சாதிய தீ பரவிக்கொண்டிருப்பது என்பது நமக்கெல்லாம் கொஞ்சம் கூட ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. கையில் புத்தகத்தை எடுத்து திரியவேண்டியவர்கள் எல்லாம் கையில் அரிவாளோடு திரிவது மிகுந்த வேதனை.. அதே ஊரில் சாதிய வேற்றுமை கொடுமைகளினால் 50 குடும்பங்கள் போய்விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

அப்படியென்றால் அங்கு எல்லாம் நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. காவல்துறையினர் இதையெல்லாம் ஏன் கண்காணிக்க மறுத்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் கண்டனங்கள், ஆதரவுகள் என்பதை தாண்டி, கட்சி எல்லைகளை தாண்டி.. அந்த ஊரில் என்ன நடப்பது என்பதை பார்த்துக்கொண்டு நம் ஊரில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க தவறிவிட்டோம்.

தம்பி நன்றாக படித்தார் என்பதற்காக வெட்டப்பட்டுள்ளார். அரசாங்கம் இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். அரசு மட்டுமின்றி பொதுமக்களும் இதை அறிய வேண்டும். மத்த ஊரை பற்றி நாம் கவலைப்படுகிறோம்.. மற்ற மாநிலங்களை பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆனால் இங்கே என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

திரைத்துறையினர் கண்டனம்

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் 'அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!' என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான ரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகச்சொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன்.ஜி, “மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment