எங்கே சறுக்கியது திமுக? அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்

Tamil Nadu By Election Results 2019: ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து தொடர் தோல்விகளையே எதிர்கொண்ட அதிமுக.வுக்கு இந்த வெற்றிகள் புதிய நம்பிக்கை.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Nanguneri, Vikravandi Election Results 2019: நாங்குனேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. நாங்குனேரியில் அதிமுக வேட்பாளர்ரெட்டியார்பட்டி நாராயணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனைவிட 32,312 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். விக்கிரவாண்டியில் அதிமுக.வின் முத்தமிழ்ச் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக.வின் புகழேந்தியை வீழ்த்தியிருக்கிறார்.

இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி ஜெயிப்பது தமிழகத்தில் அதிசயமோ, ஆச்சர்யமோ இல்லை. ஆனால் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், நாடாளுமன்ற பொதுத்தேர்தல், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என தொடர் தோல்விகளையே எதிர்கொண்ட அதிமுக.வுக்கு இந்த வெற்றிகள் புதிய நம்பிக்கை.

Nanguneri vikravandi election results 2019, tamil nadu by election results 2019, நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகள், nanguneri
Nanguneri, vikravandi election results 2019

நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளில் 9-ஐ வென்றபோதே, அதிமுக மீள்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அப்போது அதிமுக வசமிருந்த 22 தொகுதிகளில் 13-ஐ திமுக.விடம் இழந்தது நினைவு கூறத்தக்கது. இப்போது அதற்கு நேர்மாறாக திமுக, காங்கிரஸ் வசமிருந்த தலா ஒரு தொகுதியை அதிமுக கைப்பற்றி, சட்டமன்றத்தில் தன் வலிமையை 124-ஆக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கடும் போட்டியை அதிமுக உருவாக்கியபோதே, நாங்குனேரி- விக்கிரவாண்டி ‘டஃப்’பாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்படி முப்பதாயிரம், நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஊதித் தள்ளும் என்பதை அந்தக் கட்சியினரே எதிர்பார்க்கவில்லை. ஆளும்கட்சியின் பணபலம் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். அதேசமயம், அதிமுக.வுக்கு சமமாக இல்லாவிட்டாலும், பாதி அளவிலாவது திமுக தரப்பும் கரன்சிகளை வாரி இறைத்தது எதார்த்தம்!

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இதே ஆளும்கட்சிதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நாடாளுமன்றப் பொதுத்தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. அப்போதும் இதே அதிகார பலமும், பண பலமும் அதிமுக.விடம் இருக்கவே செய்தன. ஆக, பணபலம் மற்றும் அதிகார பலத்தைத் தாண்டி, வேறு சில அம்சங்களும் திமுக.வின் சறுக்கலுக்கு காரணங்கள் என்பதுதான் நிஜம்.

Nanguneri, vikravandi election results 2019, tamil nadu by election results 2019, நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் முடிவுகள், nanguneri
Nanguneri, vikravandi election results 2019

திமுக.வின் சறுக்கலுக்கான முக்கிய காரணங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

1. களப்பணி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக.வில் அமைச்சர்கள் அத்தனை பேரும் தங்களை நிரூபிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருமே இடைத்தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் கறாராக வேலை பார்த்தார்கள். ஜெயலலிதா காலத்தில் வகுக்கப்பட்ட தேர்தல் உத்தியான 50 வாக்காளர்களுக்கு ஒரு அதிமுக பிரதிநிதி என்கிற ‘மைக்ரோ மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ சரியாக கடைபிடிக்கப்பட்டது.

திமுக தரப்பிலோ, இரண்டாம்கட்டத் தலைவர்கள் தேர்தல் களத்தில் உத்வேகமாக இல்லை. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரும்போது கூட்டத்தைத் திரட்டி மகிழ்விப்பதுடன் தங்கள் பணி முடிந்ததாக அவர்கள் கருத ஆரம்பித்தது பெரும் சரிவுக்கு முக்கிய காரணம். இரண்டாம் கட்டத் தலைவர்களை சரியான முறையில் பயன்படுத்தாத தவறில் திமுக தலைமைக்கும் பங்குண்டு.

2. கூட்டணித் தலைவர்கள் பங்களிப்பு: உடல்நலப் பிரச்னை காரணமாக பொது நிகழ்ச்சிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளருக்கு பிரசாரம் செய்ய வந்தார். தேமுதிக.வுக்கு ஓரளவு செல்வாக்கான பகுதி அது! ஏற்கனவே தேமுதிக சார்பில் பிரேமலதா இரு தொகுதிகளில் பிரசாரம் செய்த நிலையில், விஜயகாந்த் கட்டாயம் வந்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தங்கள் வசம் இருக்கும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் பயன்படுத்த அதிமுக விரும்பியது.


இதேபோல சரத்குமாரை நாங்குனேரி தொகுதியில் அதிகம் பயன்படுத்தினர். பாஜக தலைவர்களை அதிகம் பயன்படுத்தாததும்கூட ஒரு வியூகமே! காரணம், பாஜக ஆதரவு வாக்குகள் ஒருபோதும் திமுக.வுக்கோ, காங்கிரஸுக்கோ போகப் போவதில்லை. கடைசி இரு நாட்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் பஞ்சமி நிலப் பிரச்னையைக் கிளப்பி, மு.க.ஸ்டாலினுக்கும் தனக்குமான நேரடி யுத்தமாக அதை மாற்றினார். போர்க்களத்தில் எதிரணியின் கவனத்தை சிதறடிக்கிற ஒரு வியூகத்தை இதன் மூலமாக வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தது அதிமுக அணி.

திமுக தரப்பிலோ திருமாவளவனை விக்கிரவாண்டி தொகுதியில் பெயரளவுக்கு ஒரு நாள் பயன்படுத்தினர். அதேபோல வைகோவை நாங்குனேரி தொகுதியில் ஒருநாள் பயன்படுத்தியதுடன் சரி! பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பூ உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும், இடதுசாரித் தலைவர்களையும் இன்னும் வலுவாக பயன்படுத்தியிருக்கலாம்.

3. இட ஒதுக்கீடு சர்ச்சை: அதிமுக அணியில் பாமக இருப்பதால், விக்கிரவாண்டியில் சிரமம் என்பதை ஆரம்பத்திலேயே திமுக யூகித்தது. அதற்கான திமுக எய்த பிரம்மாஸ்திரம்தான், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வாக்குறுதி. இதற்கு பதிலளித்த ராமதாஸ், ‘திமுக ஆட்சிக்கு வருவதாக சொல்லும் 2021-க்கு முன்பே சாதிவாரி வாக்கெடுப்பு மூலமாக தனி இட ஒதுகீடை நாங்கள் பெற்று விடுவோம்’ என முடித்துக் கொண்டார். அதிமுக அது பற்றிய கருத்துகளையே தவிர்த்து, ஒதுங்கியது.

தற்போதைய எம்.பி.சி. பிரிவினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் கணிசமான பங்கை வன்னியர் சமூகத்தினர் பெற்று வருகிறார்கள். அதேசமயம் திமுக தனது வாக்குறுதியில், வன்னியர்களுக்கு எத்தனை சதவிகிதம் என்பதை கூறவில்லை. எனவே அந்த வாக்குறுதி வன்னியர் சமூகத்தினரை பெரிதாக கவர வில்லை.

இன்னொருபுறம், மெஜாரிட்டியான ஒரு சமூகத்தினரை மகிழ்ச்சிப்படுத்த திமுக எடுத்த இந்த முயற்சியை அதே பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? என்பது முக்கியம். களத்தில் அதுவும் திமுக.வுக்கு பின்னடைவையே தந்திருக்கிறது.

4.திமுக.வின் ஜெயலலிதா பாசம்: ஜெயலலிதாவின் ஊழல்களையே பிரசாரம் செய்து பழக்கப்பட்ட திமுக, அண்மை நாட்களாக ஜெயலலிதாவை புகழ ஆரம்பித்திருப்பதை திமுக.வின் பூர்வ தொண்டர்கள் விரும்பவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக ஸ்டாலின் தனது பிரசாரத்தில், ‘ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வை அனுமதிக்கவில்லை’ என அடிக்கடி உச்சரித்தார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி பெற்றுத் தருவோம் என்பதாக மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவருமே வாக்குறுதி கொடுத்தனர். இதெல்லாம் அதிமுக அபிமானிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதைவிட, திமுக அபிமானிகளை கடுப்பேற்றவே உதவியது.

5. வாரிசு அரசியல் பிரச்னை: உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எண்ட்ரியை அனைவரும் ஏற்றுக்கொண்டதாக திமுக தலைமை நம்புகிறது. ஆனால், ‘என் குடும்பத்தில் என் மகனோ, மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள்’ என மாணவர்கள் மத்தியில் ஸ்டாலின் கொடுத்த உறுதி மொழியும், ‘திமுக.வில் கட்சிக்காக உழைத்த நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். நான் வர வேண்டியதில்லை’ என உதயநிதி அளித்த பேட்டியும் வீடியோவாக இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்களுக்கு ஒருவிதமான அவநம்பிக்கையை திமுக மீது உருவாக்குகிறது.

சரி… கட்சியினராவது மகிழ்ச்சி அடைகிறார்களா என்றால், அதுவும் இல்லை. விக்கிரவாண்டியில் உதயநிதி பிரசார நிகழ்ச்சிகளுக்காக பெரும் கூட்டங்களை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் போய்விட்டனர் என்பது களத்தில் தெரிந்த நிஜம். உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வரவே வேண்டாம் என்பதல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதை திமுக தலைமை யோசித்திருக்கலாம்.

மொத்தத்தில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் திமுக.வுக்கு கடும் போட்டியைக் கொடுக்க முடியும் என நாங்குனேரியிலும், விக்கிரவாண்டியிலும் நிரூபித்திருக்கிறது அதிமுக.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nanguneri vikravandi election results 2019 aiadmk dmk votes

Next Story
பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ வழக்கு: அதிமுக ஜெயகோபால் ஜாமீன் மனு தள்ளுபடிSubhashree death, Banner case, AIADMK Ex councilor Jayagopal's bail petition withdraw, without permission banner issue, சுபஸ்ரீ, பேனர் விழுந்து மரணம், ஜெயகோபால் ஜாமீன் மனு தள்ளுபடி, சென்னை உயர் நீதிமன்றம், banner issue, Subhashree death banner case,banner case accussed Jaygopal, Jayagopal bail petition dismissed, Madras High Court, Chennai High Court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com