நாஞ்சில் சம்பத் விலகலுக்கு ‘திராவிடம்’ இல்லாதது மட்டும்தான் காரணமா? ‘3 மாதங்களாக வேறு சில அதிருப்திகளிலும் இருந்தார்’ என்கிறார்கள் பலரும்!
நாஞ்சில் சம்பத், திமுக.வில் தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர்! பின்னர் மதிமுக.வில் நீண்ட காலம் பயணித்து, அதிமுக.வுக்கு வந்து சேர்ந்தவர்! 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்களில், அவரைத் தொடர்ந்து சென்று அதிமுக.வுக்கு பிரசாரம் செய்யும் பொறுப்பை இவரிடம் கொடுத்தார் ஜெயலலிதா.
தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டேன்; திராவிடமும், அண்ணாவும் இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை- நாஞ்சில் சம்பத் #PTExclusive #NanjilSampath @NanjilPSampath #TTVDhinakaran pic.twitter.com/ENAIA0700g
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 17 March 2018
நாஞ்சில் சம்பத்துக்கு ‘இன்னோவா’ கார் பரிசாக கொடுத்து அவரை பிரசாரத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்தினார். அதிமுக.வில் வேறு யாருக்கும் கிடைக்காத வெகுமதி இது! ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலில் சசிகலாவை எதிர்த்த அவர், பின்னர் சசிகலா அணியிலேயே இணைந்து ஓபிஎஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். பிறகு எடப்பாடியையும் அவர் விட்டு வைக்கவில்லை.
நாஞ்சில் சம்பத் மீது அது தொடர்பாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. டிடிவி தினகரனை திராவிட இயக்கத்தின் தலைவராகவே வர்ணித்து வந்தார் சம்பத். இயல்பாகவே பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர் சம்பத்! அவர், திராவிட இயக்கப் பற்றாளர் என்பதில் யாருக்கும் கருத்து பேதம் இல்லை. அதேசமயம் டிடிவி தினகரன் அணியில் அவருக்கு அதிருப்தி உருவாக இது மட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நாஞ்சில் சம்பத் கடந்த 3 மாதங்களாகவே டிடிவி தினகரன் அணியில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. அதிக பொதுக்கூட்டங்களை தவிர்த்தார். இதற்கு ஒரு காரணம், கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி இவருக்கு வழங்கப்படாததும்தான்!
நாஞ்சில் சம்பத், ஏற்கனவே அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வகித்தவர்! அதே பதவியைத்தான் டிடிவி தினகரனும் இவருக்கு வழங்கினார். ஆனால் அதிமுக.வில் ஒரு மாவட்டச் செயலாளராகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த தங்க தமிழ்செல்வனை இவருக்கு மேலே கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்தார். இது சம்பத்தை புண்படுத்துவதாக அமைந்தது.
டிடிவி தினகரன் அணியின் பொருளாளர் பதவியை டெல்டா பகுதியை சேர்ந்தவரும், டிடிவி தினகரன் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவருமான ரங்கசாமிக்கு வழங்கியதும் கட்சிக்குள் குமுறலை கிளப்பியிருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களே டிடிவி தினகரன் கட்சியில் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதாக பேச்சு எழுந்திருக்கிறது.
டிடிவி தினகரன் கட்சியின் கொள்கைகளை, கட்சிப் பெயரை முடிவு செய்வதில் தனக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என்றும் சம்பத் எதிர்பார்த்தார். ஆனால் சம்பத்தை ஒரு பேச்சாளர் என்கிற அளவுடன் டிடிவி நிறுத்திக்கொண்டார். இதெல்லாம்தான் சம்பத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
ஆனாலும் இதர காரணங்களை தனது விலகலுக்கான காரணங்களாக வெளிப்படையாக சம்பத் குறிப்பிட விரும்பவில்லை. ‘திராவிடம், அண்ணா’ என்கிற பெயர்கள் கட்சியின் பெயரில் இல்லாததையே தனது விலகலுக்கான காரணமாக குறிப்பிட்டார். ‘அரசியலில் இருந்து விலகுவதாகவும், இலக்கிய மேடைகளில் மட்டுமே இயங்கப் போவதாகவும்’ கூறியிருக்கிறார் சம்பத்.
நாஞ்சில் சம்பத், அரசியலை விட்டு விலகுவதாக கூறுவது, ‘பிரசவ வைராக்கியம் போன்றதுதான்’ என்கிறார்கள் அவரை அறிந்த நண்பர்கள். காரணம், வைகோ இவரை ஓரம்கட்டி வைத்திருந்தபோதும், ‘அரசியலை விட்டே விலகலாம் என நினைக்கிறேன்’ என்றுதான் குறிப்பிட்டார் சம்பத். அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம்பத்தை இழுக்க போட்டி போட்டன. சம்பத், 2012-ல் அதிமுக.வில் இணைந்தார்.
இப்போதும் சில வாரங்கள் பரபரப்பு பேட்டிகளை முடித்துக்கொண்டு திராவிட இயக்கத்தில் இணையவே அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள், அவரை அறிந்தவர்கள் வைகோவிடம் இருந்து அழைப்பு வந்தால் அவரிடம் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இல்லாதபட்சத்தில், அடுத்த தேர்தல் நெருக்கத்தில் திமுக.வில் அவர் இணைந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.