திருவிடந்தையில் நரேந்திர மோடி : ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார், இபிஎஸ்-ஓபிஎஸ் பங்கேற்பு

திருவிடந்தையில் நரேந்திர மோடி ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்றார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.

திருவிடந்தையில் நரேந்திர மோடி ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்றார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ் அமைப்புகள் சார்பில் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரின் பிரதமர் மோடி புறப்பட்டார். அவருடம் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ஹெலிகாப்டரில் சென்றனர்.

மாமல்லபுரம் சென்று இறங்கிய நரேந்திர மோடி அங்கிருந்து ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு காரில் சென்றார். ராணுவ தளவாட கண்காட்சி நேற்றே தொடங்கிவிட்டாலும், அதிகாரபூர்வ தொடக்கவிழா இன்று மோடி தலைமையில் நடக்கிறது. ராணுவ தளவாட கண்காட்சியில் ரஷ்யா உள்ளிட்ட 47 நாடுகள் கலந்து கொள்கின்றன. தமிழ்நாட்டில் இது போன்ற கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் முறை!

பகல் 11.20 : மோடி உரையை முடித்தார்.  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பகல் 11.10 : தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உரிய வகையில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி அதிக அளவில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் – மோடி

பகல் 11.10 : ‘போரில் வெற்றி பெறுவதைவிட மக்களின் மனதை வெற்றி பெற வேண்டும். ’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

பகல் 11.05 : தளவாட உற்பத்தியில் முன்னிலை பெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் சென்னையில் இருக்கின்றன – மோடி

பகல் 11.05 : ‘அஹிம்சையை போதித்தாலும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். மக்களை பாதுகாக்க ஒரு அரசு போருக்கு தயாராக இருக்க வேண்டும் என கவுடில்யர் கூறியிருக்கிறார். இது போன்ற ராணுவ கண்காட்சியில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறை’ என்றார் மோடி.

பகல் 11.00 : மோடி மேலும் கூறுகையில், ‘சோழர்கள் ஆட்சி செய்த இந்த இடத்தில் நாம் கூடியிருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பண்டைய காலத்தில் இருந்தே தமிழ்நாடு கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. வேத காலத்தில் இருந்தே அமைதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய பூமி இது’ என குறிப்பிட்டார்.

காலை 10.55 : பிரதமர் மோடி தனது உரையின் தொடக்கத்தில், ‘காலை வணக்கம்’ என தமிழில் குறிப்பிட்டார்.

காலை 10.45 : ‘நாட்டின் பாதுகாப்புத்துறை உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை இந்தக் கண்காட்சி நிறைவேற்றும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

காலை 10.40 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையிலும், சர்வதேச அளவிலான ராணுவ தளவாட கண்காட்சியை சென்னையில் நடத்த அனுமதித்ததற்கு பிரதமர் மோடிக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி கூறினார்.

காலை 10.35 : மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அனைவருக்கும் வணக்கம்’ என தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ‘ராணுவ தளவாட உற்பத்தியை மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைத்த பிரதமருக்கு நன்றி. இதன் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தளவாட உற்பத்தியில் செயல்பட முடியும்’ என கூறினார்.

காலை 10.30 : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்திப் பேசுகையில், ‘இந்தக் கண்காட்சியை இங்கு நடத்த ஏற்பாடு செய்ததற்கும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக’ குறிப்பிட்டார்.

காலை 10.15 : பிரதமர் மோடி கண்காட்சி மேடைக்கு வந்து சேர்ந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close