பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். டிம்புலாவில் உள்ள டின்கோயா பகுதியில் இந்தியாவின் உதவியுடன் ரூ.150 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை மோடி திறந்து வைத்தார். இலங்கையில் தேயிலை உற்பத்தில் முன்னிலையில் இருக்கும் 6 முக்கிய பகுதிகளில் டிக்கோயாவும் ஒன்று.
இந்நிலையில், டிக்கோயாவில் உள்ள தமிழர்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:
அமைதி மற்றும் செழுமையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும்.
இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சிலோன் தேயிலை உலகளவில் பிரபலமானது. தற்போது தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கை 3-வது இடத்தில் முன்னிலை வகிக்கிறது என்றால், இதற்கு உங்களின் கடினமான உழைப்பு தான் காரணம்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/modi-2.jpg)
சிங்களர்கள், தமிழர்கள் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிங்களர்கள் மற்றும் தமிழர்கள் என ஒன்றிணைந்து பன்முகத் தன்மையோடு வாழ்வது கொண்டாடப்பட வேண்டியதாகும்.
உலகத்திலேயே தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்த மொழி. இங்கு வாழும் தமிழகர்கள் பலர் சிங்கள மொழியையும் அறிந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது. தைரியம் மிக்க உங்களது முன்னோர்கள் இந்தியாவில் இருந்து சிலோனுக்கு பயணம் மேற்கொண்டு குடிபெயர்ந்தனர் என்பதை தற்போது நினைவுகூர்கிறேன். இந்தியாவின் சிறந்த அடையாளமாக திகழும் எம்ஜிர் பிறந்தது இலங்கையில்தான். அதேபோல, கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே தலைசிறந்த பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை வழங்கியதும் தமிழ் சமூகம் தான்.
இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவற்கு இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பிடும்படியாக இலங்கை அரசு ஐந்தாண்டு செயல் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இலங்கையின் இது போன்ற திட்டங்களுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும், இலங்கை தமிழர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/modi-3.jpg)
இரு நாடுகளின் இடையேயான ஒப்பந்தத்தின்படி, தற்போது மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து மாகாண மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்திய வீட்டுமனை திட்டத்தின் கீழ் இதுவரை ஊரக பகுதிகளில் 4,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்த திட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.