”அனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்”: தேசிய ஆதிதிராவிட நலத்துறை

அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் விசாரணை மேற்கொண்டார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று தலித் சமூகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிளஸ் டூ தேர்வில் 196.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருந்தும் மாணவி அனிதாவால் மருத்துவ படிப்பில் இடம் பெற முடியவில்லை. இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் குறிப்பிடத்தக்கது. தன்னால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லையே என்ற மன வேதனையில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், பொதுமக்கள், மாணவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராமத்தினரிடமும் தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “அனிதா குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அனிதா மரணம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தும்.”, என கூறினார்.

×Close
×Close