தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் நிறுவ வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 1986-ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதேசமயம், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பித்தால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, நவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டது.