கடந்த 174 நாட்களாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த நெடுவாசல் மக்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுவாசல், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் உள்ளிட்ட இந்தியாவின் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயம் பொய்த்துவிடும் என மக்கள் குற்றம்சாட்டி நெடுவாசல் கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்த மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் உறுதி கூறியதையடுத்து, மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், மத்திய அரசு கடந்த மார்ச் 27-ஆம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தைத் துவங்கினர். அவர்களது போராட்டம் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதன் முதல் கட்டப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கினர். தினமும் விவசாயிகள், பெண்கள் திரண்டு பல்வேறு வகையில் போராட்டம் நடத்தினர். போராட்டம் 174 நாட்களை கடந்த போதிலும், மக்களின் கோரிக்கைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
தொடர் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
ஒன்ஜிசி மீண்டும் தன் பணிகளை தொடங்குமானால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் எச்சரித்துள்ளார்.