தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம், திரண்டு வந்த கிராம மக்கள்

இவர்களது போராட்டம் விரைவில் 100 நாட்களை எட்டவிருக்கிறது. ஆனால், தங்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடிவரும் நிலையில், அருகாமையில் உள்ள கிராமங்கள் திரண்டு வந்து நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் இணைந்துகொண்டதன் மூலம் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

நெடுவாசல், புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் உள்ளிட்ட இந்தியாவின் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளித்தது. இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயம் பொய்த்துவிடும் என மக்கள் குற்றம்சாட்டி நெடுவாசல் கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்த மாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் உறுதி கூறியதையடுத்து, மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், மத்திய அரசு கடந்த மார்ச் 27-ஆம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தைத் துவங்கினர். அவர்களது போராட்டம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களது போராட்டம் விரைவில் 100 நாட்களை எட்டவிருக்கிறது. ஆனால், தங்கள் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை நெடுவாசல் கிராம மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அருகாமை கிராமங்களை சேர்ந்த கிராம பொதுமக்கள், இயக்கத்தினர் திரளாக வாகனங்களில் வருகைதந்து கலந்துகொண்டனர். வடகாடு, ஆலங்குடி, கோட்டைக்காடு, நல்லாண்டர்கொல்லை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

நடைபெற்றுவரும் சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தரமாட்டோம் என மாநில அரசு கூறி வருவது கண் துடைப்பு எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும், அதுவரை மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதிகளை நம்பமாட்டோம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

×Close
×Close