வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. தப்பித் தவறி கூட சூரியனை பார்க்க முடியாத அளவிற்கு, கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை தமிழகத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை எங்கே, குழிகள் எங்கே என்பது கூட தெரியாத அளவிற்கு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், ஒருவழிச் சாலையாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கையும் இருப்பதால், 9 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சிட்லபாக்கம் பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கழிவு நீரும் தண்ணீரோடு கலந்து வீட்டிற்குள் புகுந்துள்ளதால், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அங்கு தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரை தர உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 0.5 அளவு குளோரின் கலந்த தண்ணீரை அருந்துவது மூலம் தொற்று நோயை தவிர்க்கலாம். 420 ஆம்புலன்ஸ்கள், 770 மருத்துவ முகாம்களுக்கான குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரில் குளோரின் அளவு சர்பார்க்கப்பட்டு வழங்கப்படும்.
மக்கள் சாலையோரம் உள்ள சுகாதாரமற்ற கடைகளில் சாப்பிட வேண்டாம். தண்ணீரை கொத்திக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள தண்ணீர்களை உடனே அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.