பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உழவர்களுக்கு சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ஆகியவற்றை பெற்றுத் தரவும், வறட்சி நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி தாக்கியது. இதனால் ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், கடன் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்ற கவலையில் தற்கொலை செய்து கொண்டும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நெல்லுக்கு ரூ.5465, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3000 என்ற அளவில் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இது யானைப்பசிக்கு சோளப்பொறி என்று எதிர்ப்பு எழுந்த போது, உழவர்களுக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டிருப்பதால், அந்த தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முறையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்தனர். ஆனால், இதுவரை பாதியளவு உழவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் கடந்த 2012-ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வறட்சியால் சம்பா பயிர்களை இழந்த விவசாயிகள் நடப்பாண்டு குறுவை சாகுபடியில் தான் ஓரளவு இழப்பை சரி செய்யலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத்தர தமிழக ஆட்சியாளர்கள் தவறியதால் குறுவை சாகுபடி சாத்தியமாகவில்லை. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக ஆட்சியாளர்கள் செய்யவில்லை.
கர்நாடகத்திலும், கேரளத்தின் வயநாடு பகுதியிலும் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடியை நெருங்கியுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்காக அக்டோபர் 2-ஆம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. ஆனால், சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளைச் செய்வதற்குக் கூட பணம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் நடப்பாண்டில் எதிர்பார்த்த பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற ஐயம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கூட்டுறவு சங்கமும் பயிர்க்கடன் வழங்கலை இன்னும் தொடங்கவில்லை. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், அவர்கள் சம்பா சாகுபடியைத் தொடங்க உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை.
இதற்காக தமிழக அரசு பெரிய அளவில் திட்டம் தீட்டி செயல்படுத்தத் தேவையில்லை. உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர்க்காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலே போதுமானது. அத்துடன் குறுவை சாகுபடி இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ. 25,000 வீதம் நிவாரண உதவி வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இது தவிர தமிழகத்திலுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.2000 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியிருக்கிறது. நடப்பாண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் அடுத்த ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், சர்க்கரை ஆலை நிர்வாகங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி ரூ.2000 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தர வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.