‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது : ஓ.பி.எஸ். மீண்டும் டெல்லி திரும்பும் பின்னணி

இப்போது ‘நீட்’ விலக்கு ஒப்புதல் சமயத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து, ஓ.பி.எஸ்.ஸை இன்னமும் டெல்லி கைவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டது.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ‘நீட்’ நாடகம், முடிவுக்கு வருகிறது. தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு டெல்லி ஒப்புதல் கொடுக்க முடிவு செய்துவிட்டது. இந்தச் சூழலில் தனது கோரிக்கை அடிப்படையிலும் இது நிறைவேறியதாக இருக்கவேண்டும் என ஓ.பி.எஸ். முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவருக்கு பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு முறையாக ‘நீட்’டை மத்திய அரசு கொண்டு வந்தது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் அதன் கேள்விகள் அமைந்ததால், தமிழ்நாடு மாநில பாடத்திட்ட மாணவர்கள் இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டது. இதை தவிர்க்க, தமிழகத்தில் மட்டும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்களை ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

ஆனால் இந்த அரசாணை, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. ஏற்கனவே ‘நீட்’டில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதன் மூலமாகவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ஆனால் நீதிமன்றம் நிராகரித்த ஒரு விவகாரம் தொடர்பான மசோதாவுக்கு நேரடியாக ஜனாதிபதி மூலமாக ஒப்புதல் கொடுக்க மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்தபோதும், பிரதமர் மோடியிடம் இதை வலியுறுத்தினார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன் என மத்திய அமைச்சர்கள் பலரையும் சந்தித்தனர். ‘நீட் தேர்வுக்கு விலக்கு பெறாவிட்டால் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் 85 சதவிகித இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களும், வெறும் 15 சதவிகித இடங்களை மட்டுமே மாநில பாடத்திட்ட மாணவர்களும் பெறுவார்கள்’ என மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசியல் ரீதியாகவும் இது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரும் பின்னடைவை உருவாக்கும் என டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இறுதியாக இந்த விவகாரம் பற்றி விசாரித்து ‘ரிப்போர்ட்’ கொடுக்கும்படி மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திரசிங், நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை மோடி கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள். இவர்களில் நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தின் உணர்வுகளை அழுத்தமாக எடுத்துச் சொன்னதாக கூறப்படுகிறது. அதன்பிறகே மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறங்கி வந்திருக்கிறது.

இதில் முக்கியமான திருப்பத்தையும் நிர்மலா சீத்தாராமன் மூலமாகவே மத்திய அரசு மேற்கொண்டது. இன்று (ஆகஸ்ட் 13) பேட்டியளித்த நிர்மலா சீத்தாராமன், ‘நீட்டில் நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால் ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும்’ என அறிவித்தார். இதற்காகவே காத்திருந்த மாநில அரசும், அதன் அமைச்சர் விஜயபாஸ்கரும், ‘நாளையே (ஆகஸ்ட் 14) அவசர சட்ட முன்வடிவை டெல்லியில் உரிய அமைச்சகங்களிடம் முன்வைப்பதாக’ கூறியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு எந்த விதத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் ‘நீட்’ விவகாரத்தில் கடை பிடிக்கப்படுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டில் மெரினாவில் திரண்ட கூட்டத்தின் அடிப்படையில் அது மொத்த தமிழகத்தின் உணர்வாக பார்க்கப்பட்டது. ‘நீட்’ பிரச்னையில் இன்னமும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் யாராவது நீதிமன்றத்தை நாடினால் என்ன மாதிரியான முடிவு வருமோ? என்கிற பயம் இருக்கவே செய்கிறது.

இதற்கிடையே கடந்த 11-ம் தேதி வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவுக்கு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. ஆனால் அதேநாளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால் ஓ.பி.எஸ். செல்வாக்கு டெல்லியில் சரிந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

இதற்கும் விடை இப்போது கிடைத்திருக்கிறது. ‘நீட்’ தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய அரசு துறைகள் ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னதாக நாளை (ஆகஸ்ட் 14) காலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, எடப்பாடியின் கோரிக்கை அடிப்படையில் மட்டுமல்லாமல், ஓ.பி.எஸ். கோரிக்கை அடிப்படையிலும் ‘நீட்’டுக்கு மத்திய அரசு விலக்கு கொடுப்பதாக ஓ.பி.எஸ். தரப்பு காட்டிக்கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு!

டெல்லியில் இருந்து கட்சி சீனியர்களுடன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சனி பகவான் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில் என ஆன்மீக விசிட் சென்ற ஓ.பி.எஸ். இதற்காக அவசரமாக மீண்டும் டெல்லி திரும்புகிறார். கடந்த 11-ம் தேதியே ஓ.பி.எஸ்.ஸை பிரதமர் சந்தித்திருந்தால், அ.தி.மு.க. அணிகளுக்கு இடையே பஞ்சாயத்து பேசுவதற்கு சந்தித்ததாக சர்ச்சை எழும் என்பதாலேயே அரசு பதவியில் இல்லாத ஓ.பி.எஸ்.ஸை சந்திக்கவில்லை. இப்போது ‘நீட்’ விலக்கு ஒப்புதல் சமயத்தில் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து, ஓ.பி.எஸ்.ஸை இன்னமும் டெல்லி கைவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டது.

ஒரு வழியாக ‘நீட்’ நாடகம் முடிவுக்கு வருகிறது.

×Close
×Close