நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது: மு.க ஸ்டாலின்

இப்போதும் குடி முழுகிப் போய்விடவில்லை. துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் வருகிறது. இதை பயன்படுத்தியாவது, போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு கபட நாடகம் நடத்துவதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26-07-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

செய்தியாளர்: நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?

மு.க ஸ்டாலின்: மத்திய அரசிடம் மாநில அரசு மண்டியிட்டு, காலில் விழுந்து, சரணாகதி அடைந்து கிடக்கிறது. அதனால், ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

செய்தியாளர்: நாளை நடைபெறவுள்ள ‘நீட்’ எதிர்ப்பு மனித சங்கிலி பேரணிக்குப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எந்த மாதிரியான ஆதரவு உள்ளது?

மு.க ஸ்டாலின்: நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலிப் போராட்டத்தை பார்த்து விட்டு அதன் பிறகு, நீங்களே எழுதுங்கள். நான் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களோ, மாட்டீர்களோ?

செய்தியாளர்: நீட் தேர்வு எழுதியவர்கள் தமிழக அரசின் முடிவுகளால் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறார்களே?

மு.க ஸ்டாலின்: அந்தக் குழப்பத்தை நீக்க வேண்டும், அந்த பிரச்னையில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும், அதற்காக மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துகிறோம். ஏற்கனவே குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது உரிய அழுத்தம் தந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்கள். இப்போதும் குடி முழுகிப் போய்விடவில்லை. துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் வருகிறது. இதை பயன்படுத்தியாவது, போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நான் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளேன். இப்போதாவது அதைச் செய்ய வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், தொடர்ந்து தங்கள் பதவியை காப்பற்றிக் கொள்ள, பதவியின் மூலம் ஊழல் செய்ய, கொள்ளையடிக்க, கமிஷன் பெற வேண்டும் என்ற நிலையில், தங்கள் பணிகளைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்ற மத்திய அரசு முயலும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் தலைமையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனக் கூட்டம் நடைபெறுகிறதே?

மு.க ஸ்டாலின்: முதலமைச்சர்தான் அந்தச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர். இந்த விவகாரம் குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்டபோது, ”அப்படியொரு எண்ணம் கிடையாது, அந்த மாதிரி எந்தத் தகவலும் இல்லை”, என்று கூறியுள்ளார். என்ன நடக்கிறது என பொறுத்திருந்துப் பார்ப்போம்.

செய்தியாளர்: நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய மணடலமாக மாற்றும் முயற்சி குறித்து?
மு.க ஸ்டாலின்: இதனைக் கண்டித்து நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

×Close
×Close