நீட்தேர்வு முடிவு ஏமாற்றம்... மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: அன்புமணி

இந்த இடங்களில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களால் 10 முதல் 20 விழுக்காடு இடங்களைக் கூட கைப்பற்ற முடியாது

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்தத் தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் ஏமாற்றமளிக்கின்றன. இதைப் பார்க்கும்போது சமூக நீதியை ஒழிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தந்திரப் போரில் ஏழை மாணவர்கள் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றனர் என்று தான் தோன்றுகிறது.

இந்தியா முழுவதும் 11 லட்சத்து 38,890 பேர் நீட் தேர்வை எழுதியுள்ள நிலையில், அவர்களில் 53.71%, அதாவது 6 லட்சத்து 11,739 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து சுமார் 80,000 பேர் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் கணிசமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம்  720 மதிப்பெண் கொண்ட நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 107 மதிப்பெண்களும், பொதுப்பிரிவினர் 131 மதிப்பெண்களும் பெற்றாலே தேர்ச்சி பெறலாம். ஆனாலும், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதை விட அதிக மதிப்பெண்களைப் பெற்று தர வரிசையில் முன்னணி இடங்களைப் பிடிப்பது தான் மிகவும் முக்கியம் ஆகும்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் கூட தமிழகத்தில் முதல் 5 ஆயிரம் இடங்களுக்கும் வந்தவர்களின் எண்ணிக்கை சில நூறுகளைக் கூட தாண்டாது என்பது தான் ஏமாற்றமளிக்கும் செய்தி ஆகும்.

தமிழ்நாட்டில் மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியது போக அரசு ஒதுக்கீட்டுக்கு 3623 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் தனியார் கல்லுரிகளுக்கு சொந்தமான 750 மாணவர் சேர்க்கை இடங்கள் நடப்பாண்டில் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதனால் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 3000 இடங்கள் மட்டுமே கிடைக்கும். இந்த இடங்களில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களால் 10 முதல் 20 விழுக்காடு இடங்களைக் கூட கைப்பற்ற முடியாது என்பது தான் மிகவும் வேதனை அளிக்கும் உண்மை ஆகும். கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்தன. அந்த வகையில் நடப்பாண்டில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சுமார் 2500 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் நீட் தேர்வு என்ற பெயரில் பறிக்கப்பட்டிருக்கின்றன.    

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கடந்த 2010-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, அந்தத் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு இத்தேர்வைக் கொண்டு வந்தது.

எனினும், உச்சநீதிமன்றத் தடை காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இத்தேர்வை பாஜக அரசு மீண்டும் அறிமுகப்படுத்தி சமூக நீதிக்கு சாவுமணி அடித்திருக்கிறது. தமிழக அரசு இதய சுத்தியுடன் போராடியிருந்தால், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மாணவர்கள் நலனைக் காத்திருக்க முடியும்.

ஆனால், அவ்வாறு செய்யாததால் சமூகநீதிப் படுகொலைக்கு தமிழக அரசும் துணை போயிருக்கிறது. எனவே, அதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப் படும் நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தெளிவான நிலைப்பாடு ஆகும்.

வேறு வழியே இல்லாமல் நீட் தேர்வை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை வந்தால் கூட, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மாணவர்கள் பழகிய பிறகு தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், இதையெல்லாம் பின்பற்றாமல், பழக்கமில்லாத பாடத்திட்டத்தைக் கொண்ட நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் தமிழகத்தில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு  வழங்கப்பட்டது போக மீதமுள்ள இடங்களில் 80 விழுக்காட்டை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 20% இடங்களை மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு பெறவும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் இதற்கு தடை  கோரி வழக்குத் தொடரப்பட்டால் அதை முறியடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

×Close
×Close