நீட் தேர்வு: 36% இடங்களே மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது: அன்புமணி

மொத்தமுள்ள 3,534 இடங்களில் 3,500 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.

நீட் தேர்வின் மூலம் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருந் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெருந் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 3,534 இடங்களில் 36.25% இடங்களே நடப்பாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், அது சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பெரும் ஆபத்தாக முடிவடையும் என்று தொடக்கத்திலிருந்தே பாமக வலியுறுத்தி வந்தது. இப்போது அது அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பாண்டில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 3,534 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் அதிகபட்சமாக 37.06%, அதாவது 1,310 இடங்கள் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கக்கூடும். 1,281 இடங்கள், அதாவது 36.25% மட்டுமே மாநிலப் பாடத்திட்டத்தில் நடப்பாண்டில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும். மீதமுள்ள 26.68%, அதாவது 943 இடங்களை கடந்த ஆண்டுகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 2.279 இடங்களை, அதாவது 98.32% இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ மாணவர்களுக்கு 3 இடங்களும், மற்ற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன.

கடந்த ஆண்டு 98.32% இடங்களைக் கைப்பற்றிய மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு இம்முறை 36.25% இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்க்கான மருத்துவக் கல்வி வாய்ப்புகள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டன. நீட் தேர்வின் மூலம் இழைக்கப்பட்ட சமூக அநீதி இது தான்.

நீட் தேர்வால் இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றாலும் கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 2,318 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அவற்றில் 718 இடங்கள் பொதுப்போட்டிக்கான இடங்கள் ஆகும். இவற்றில் 615 இடங்களை பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினர் தான் கைப்பற்றினர்.

அதே அளவுகோலை வைத்துப் பார்த்தால் இந்த ஆண்டு பொதுப்போட்டிக்கான 1,095 இடங்களில் 950 இடங்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாக 550 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டது தான் நீட் தேர்வால் ஏற்பட்ட பலன். இந்த அனைத்து விளைவுகளுக்கும் அடிப்படைக் காரணம் மத்திய, மாநில அரசுகளின் துரோகம் தான்.

இந்த புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் கூட நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலானது தான். 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் மொத்தமுள்ள 3,534 இடங்களில் 3,500 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். இப்போது கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 63% இடங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வகையில் இது உண்மை தான் என்றாலும் கூட, அவர்களில் 943 மாணவர்கள் சில ஆண்டுகளுக்கே முன்பே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்காக மட்டுமே பயிற்சி பெற்று வந்தவர்கள் ஆவர். அந்த அடிப்படையில் இவர்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களாக கருத முடியாது.

நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் அதிகபட்சம் 10 பேராவது அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்களா? என்பது ஐயமே. மருத்துவப் படிப்பில் சேருவோரில் 99 விழுக்காட்டினர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கோடீஸ்வரர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது தான். இது காலப்போக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்த நிலையை மாற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வ, அரசியல்பூர்வ வழிகளை அனைவரும் ஆராய வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close