நீட் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவி அனிதா மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அக்கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல், நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 4-ம் தேதி (இன்று) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அதிமுக, பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகள் அனைத்துக்கும் திமுக சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.நீட் விவகாரத்தில் திமுக சார்பில் நடத்தப்படும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்து, நீட் உள்ளிட்ட கொடுங்கரங்களிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்கவும், மாணவி அனிதாவின் நிலை தமிழகத்தில் இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்ற நிலையை உருவாக்கவும் தோழமை சக்திகளுடன் இணைந்து திமுக உறுதியுடன் பாடுபடும். அனிதாவின் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய - மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றும் பாதுகாக்க சூளுரைப்போம் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.