நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி வருகிற 27-ம் தேதி திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்கள் பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், திமுக மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கதிராமங்கலம், நீட் தேர்வு விவகாரங்கள், நெடுவாசல் விவசாயிகள் போராட்டம் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்றாக, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 27-ம் தேதி மாலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை பயன்படுத்தி நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது, அதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
அப்போது பின்பற்றப்பட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதே போல, இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு. நீட் தேர்வுக்கு பெரும்பாலானோர் இன்றளவும் எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.