நீட் விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளையடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விமர்சித்தார்.

நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

எனவே, நீட் தேர்வில் இருந்து இந்த ஓர் ஆண்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதையடுத்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீதிமன்றம் சென்றனர். பலகட்ட சட்டப் போராட்டங்களுக்கு பின், நீட் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு தனது வாதத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இது தமிழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

இதையடுத்து, நீட் விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதி (இன்று) நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்று பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், “இந்த ஆர்ப்பட்டத்தின் மூலம் தமிழக மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகிறது. மக்களின் கோரிக்கைகள் நியாயம் என்று பட்டால், அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, நீட் விலக்குக்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசுகையில், “நீட் தேர்வில் தமிழகம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. நம்பிக்கை மோசடி செய்கிறார்கள். மத்திய அரசின் துரோகத்தால் ஏராளமான மாணவர்கள், மருத்துவப் படிப்பை படிக்க முடியாமல் போயுள்ளது. தமிழக மக்களுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே கொள்ளையடித்தது தொடர வேண்டும் என்பதாலேயே தமிழக அரசு தொடர்கிறது. கொள்ளையடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அரசுக்கு கொள்கைகள் இல்லை” என்று சாடினார்.

இதனிடையே, நீட் அடிப்படையில் நேற்றைய தினம் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close