நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா எனவும், அதற்கேற்ற அவசரச் சட்டத்தை இயற்ற முடியுமா எனவும் தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் பரவலாக இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. ஆனாலும், மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது, அதனையடுத்து, நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
அப்போது பின்பற்றப்பட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதே போல, இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு. நீட் தேர்வுக்கு பெரும்பாலானோர் இன்றளவும் எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடாக ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்கனை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் தர்னீஷ்குமார், சாய் சச்சின் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு தமிழக மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனிடையே, புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவுக்கு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, "நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா எனவும், அதற்கேற்ற அவசரச் சட்டத்தை இயற்ற முடியுமா எனவும் தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அப்படி அவசரச் சட்டம் இயற்றினாலும் அதற்கு ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்விகளை முன்வைத்தும் தீவிர ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
"சட்ட ரீதியிலான ஆலோசனை நடப்பது உண்மை தான். ஆனால், அவசரச் சட்டம் தொடர்பாக இதுவரை முடிவெடுக்கப்படவில்லை" என சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.