நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓர் ஆண்டு விலக்கு என்பது அவசர சிகிச்சையே என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பிலும் தமிழக அரசுக்கு எதிரான அவரது கருத்து எதிரொலித்தது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என கமல்ஹாசன் அப்போது குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கமல்ஹாசன் மற்றும் தமிழக அரசுக்கு இடையேயான வார்த்தை போர் முற்றியது. விளம்பரத்துக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கமல் முன்வைக்கிறார் எனவும், வருமான வரி சோதனை என மிரட்டல் தொனியில் அமைச்சர்கள் பேசி வந்தாலும், எதற்கும் அஞ்சாமல் தனது விமர்சன அம்புகளை தமிழக அரசு மீது தொடர்ந்து கமல்ஹாசன் எய்து வருகிறார். இவருக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
"ஊழலலிருந்து சுதந்திரத்தை நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்" என சுதந்திர தினத்தன்றும் அரசை சாடினார். அவரது டுவீட்டுக்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதற்கு நன்றி தெரிவித்துள்ள கமல்,"மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும், அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. இந்த ஒரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே, இனி என்ன செய்வோம்?" என விமர்சித்துள்ளார்.
நன்றிNEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும் அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே.இனி என்ன செய்வோம்?
— Kamal Haasan (@ikamalhaasan) 16 August 2017
முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டு விலக்களிக்க ஒத்துழைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்த போது,"நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயை கூர்ந்து உடனே பேசுங்கள்" என தெரிவித்திருந்தார்.
நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) 13 August 2017
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நீட் குறித்து தனக்கு தெரியாது என்றும், டெங்கு குறித்து தான் தெரியும் என கமல் கிண்டலாக தெரிவித்திருந்தார்.
ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதன் மூலம், எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை தானே செய்வது போன்ற தோற்றத்தை கமல் வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.