ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தமிழக பணிகளை ஆய்வு செய்வதுபோல, பிரதமர் மோடியின் பணிகளை ஜனாதிபதி ஆய்வு செய்ய முடியுமா? என ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், திடீரென தமிழக அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய கிளம்பியிருப்பது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. திமுக, காங்கிரஸ் உள்பட தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளும் இதை கண்டித்துள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.
ஹெச்.ராஜா ட்வீட்...
ஆனால் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், ஜெயகுமார் உள்ளிட்டவர்கள், ஆளுனரின் ஆய்வை வரவேற்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள். ‘ஆளுனரின் ஆய்வால் மத்திய அரசின் உதவி தமிழகத்திற்கு அதிகம் கிடைக்கும்’ என கூறியிருக்கிறார் வேலுமணி. அதிமுக-வில் ஒரே எதிர்ப்புக் குரல், அன்வர்ராஜா எம்.பி.யிடம் இருந்து வந்திருக்கிறது. அவர்தான், ‘அம்மா (ஜெயலலிதா) இருந்திருந்தால் இப்படி ஆளுனர் ஆய்வு நடத்தியிருப்பாரா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆனால் இதற்கும் இன்று கோயம்புத்தூரில் பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘அம்மா இருக்கும்போது ஆய்வு நடத்தியிருந்தாலும் தப்பில்லை. டேக் இட் ஈஸி’ என திருவாய் மலர்ந்தார். ஆக, ஆளுனரோ, மத்திய அரசோ என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் மாநில அரசு இருப்பதையே இது காட்டுகிறது.
இதேபோல தமிழக பாஜக தலைவர்களும் தொடர்ந்து ஆளுனர் ஆய்வுக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வருகின்றனர். பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், ‘மேதகு ஆளுநர் அவர்கள் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது இயல்பானது. வரவேற்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மத்திய அரசு திட்டங்களில் நடக்கும் ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் அவர்களின் ஆய்வு அதிகரிக்கப்பட வேண்டும்.’ என கூறியிருக்கிறார்.
இதற்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் கொடுத்திருக்கும் பதில்கள் செம ரகளை ரகம்! மணிகண்டன். என் என்பவர், ‘உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள்லாம் தமிழ்நாடைவிட வளர்ச்சி கம்மி. அதிக ஊழல். அதனால அங்க முதல்ல ஆளுநர் ஆய்வு நடத்துங்க. அப்றம் தமிழ்நாட்டை பாக்கலாம்’ என கூறியிருக்கிறார்.
பாலகுமரேசன் என்கிற பாகு, ‘அப்படியே பிரதமர் வேலையும், ஜனாதிபதி ஆலோசனை செய்து கண்காணிக்க வேண்டும்’ என காமெடி நடிகர் கவுண்டமணி கூறுவதுபோல படம் இணைத்து விட்டிருக்கிறார். ‘நம்பர் 7’ என்கிற ஐ.டி.யில், ‘பிஜேபி ஆளும் மாநிலங்கள்ல இப்டி ஆய்வு பண்ண மாதிரி தெரியலயே.. அதென்ன மத்த கட்சி இருக்கிற மாநிலத்துல மட்டும் ஆய்வு பண்றீங்க’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இளந்தமிழ் அறிவாளன் என்பவர், ‘மேதகு குடியரசு தலைவர் CBI, IT, NSA, RBI மற்றும் மத்திய அரசின் துறைகளை ஆய்வு செய்ய மோதியை அனுமதிக்க சொல்லுங்கள் ராசாஆஆஆஆ...’ என கலாய்த்திருக்கிறார். மேலும் பலர் இதில் மாநில சுயாட்சி குறித்தும், ‘பெண் சிங்கம் மம்தா ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் இதுபோல ஆய்வு நடத்த முடியுமா?’ என்றும் கேள்வி விடுத்திருக்கிறார்கள். ஹெச்.ராஜா இவற்றுக்கு பதில் ஏதும் கூறவில்லை.
சமூக வலைதளங்களில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கைதான் ஹாட் டாக்!