நோயாளிகளுடன் டாக்டர்கள் இனிமேல் புகைப்படம் எடுக்கக்கூடாது என மாநில மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் புகைப்படங்கள் எடுப்பது, பெயர்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை அம்பலப்படுத்தும் மருத்துவர்கள், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் (தொழில்முறை நடத்தை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள்) விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது போன்ற குற்றங்களுக்கு, மாநில மருத்துவப் பதிவேட்டில் இருந்து அம்மருத்துவரை இடைநீக்கம் செய்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்படும் என பேரவைத் தலைவர் கே.செந்தில் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 5 கார்ப்பரேட் மருத்துவமனைகளைச் சேர்ந்த 5 மருத்துவர்களுக்கு இதன் காரணமாக காரணம்கேட்புக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
"அவர்கள் மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்த பிறகு நாங்கள் அவர்களை எச்சரிக்கையுடன் விடுவித்தோம்," என்று அவர் கூறினார்.
பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாக உணருவதால், நோயாளிகளிடமிருந்து சம்மதத்தை கவுன்சில் ஏற்காது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
இதைப்பற்றி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தியிடம் பேசியபோது, "இதுபோன்ற நெறிமுறைகளை வரவேற்கிறோம். இந்தத் தொழிலில் உள்ளவர்கள் நோயாளியின் விவரங்களை தங்கள் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள், அத்தகைய செயல்கள் எச்சரிக்கப்பட வேண்டும். ஆனால் நோயாளிகள் தங்கள் தனிப்பட்ட தகவலுக்கு ஒப்புதல் அளிக்கும்போது அதை நாங்கள் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து" என்கிறார்.
மக்களுக்கு மருத்துவத் துறையின் தகவல்களை பரிமாறும் வகையில், மருத்துவமனைகளில் கொண்டுவரப்படும் புதிய வசதிகள் மற்றும் மேம்பட்ட அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களைப் பற்றி வெளியிடுவதற்கு மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil