அரசு தலைமை மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சோதனை லேப்: கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை கண்டறிய தனியார் ஆய்வக மையம் உட்பட மொத்தம் 21 மையங்கள் உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இல்லை.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது. காய்ச்சலுக்கு தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை கண்டறிய தனியார் ஆய்வக மையம் உட்பட மொத்தம் 21 மையங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆனந்த்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சோதனை ஆய்வகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், நெல்லை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே இந்த ஆய்வகங்கள் தற்போது உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் சோதனை ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பலர் இறந்து போகின்றனர். எனவே, அடுத்த நான்கு மாதத்திற்குள் இந்த ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்:

காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். முறையாக சிகிச்சை பெற்றால் ஒருவாரத்தில் இந்த காய்ச்சல் குணமடைந்துவிடும்.

×Close
×Close