‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் பதிந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, டிடிவி தினகரன் நேற்று (வியாழன்) சென்னை கொண்டுவரப்பட்டார். அவரிடம் நேற்றுமுதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை உயரதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், “ரூ.1.3 கோடி கைப்பற்றப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கும், தினகரனுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த நேரடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. இப்போதுவரை இருவரும் உரையாடிய ஆடியோ ஆதாரம் மட்டுமே எங்களிடம் உள்ளது. ஆனால், அதில் இந்த லஞ்ச வழக்கில் தினகரனுக்கு பங்கு உள்ளது போன்ற எந்த விஷயமும் இல்லை”.
மேலும் அந்த காவல்துறை அதிகாரி கூறியதாவது, “டெல்லி போலீஸ் வரலாற்றிலேயே, ஒரு ஆடியோ டேப்பை ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஒரு மூத்த அரசியல்வாதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது ‘அரிதிலும் அரிது’ . டெல்லி போலீஸ் உட்பட அனைத்து புலனாய்வு துறைகளிடமும் போன் கால்களை இடைமறித்து கேட்கும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அந்த ஆடியோ கால்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஒரு அரசியல்வாதி மீது விசாரணை பதிந்து, அவரை கஸ்டடியில் எடுத்து நாங்கள் இதற்கு முன் விசாரித்ததே கிடையாது. ஏனெனில், நீதிமன்றத்தில் இந்த ஆதாரம் செல்லுபடியாகும் வாய்ப்பு மிக மிக குறைவு” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த டிசம்பர் மாதம் சந்திரசேகர ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு முன், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அஇஅதிமுக-வின் தலைவர் ஒருவரின் பல ஆடியோ டேப்கள் எங்கள் வசமுள்ளது. அந்த ரெய்டின் போது ரூ.132 கோடி கைப்பற்றப்பட்டது. அதில், 32 கோடி மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் அடக்கம்” என்றார்.
இதற்கிடையில், இன்று காலை தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை, டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னம் பெறும் விவகாரத்தில், சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு பணத்தை அனுப்ப உதவியதாக குற்றம் சாட்டி, அதனடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அந்த காவல்துறை அதிகாரி அளித்த தகவலில், “இந்த வழக்கில் ஒரு பெரிய முன்னேற்றமாக, திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், டெல்லியில் உள்ள ஹவாலா ஏஜென்டிற்கு பணம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அந்த பணம் தான், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆடியோ டேப்பை தவிர தினகரனுக்கு எதிரான ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, ‘கஸ்டடியின் போது சந்திரசேகர் கூறிய தகவல்களால், தினகரனின் கஸ்டடியை ஐந்து நாட்களுக்கு வைத்துக் கொள்ள உதவியது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக இருந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார்.
இறுதியாக அவர் கூறுகையில், “அந்த திருச்சியை சேர்ந்த தொழிலதிபரை தீவிரமாக கண்காணித்தால், பணம் ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக, அவருக்கும் தினகரனுக்கும் அல்லது மற்ற தமிழக அமைச்சர்களுக்கும் உள்ள நேரடி தொடர்பு குறித்த உண்மைகள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.