'நீதிமன்ற அவமதிப்பு' தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி எஸ் கர்ணனை கைது செய்ய, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கொல்கத்தா போலீஸ் குழு நேற்று (புதன்கிழமை) சென்னை வந்தடைந்தது. ஆனால், நீதிபதி கர்ணன் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால், அவரை கைது செய்ய முடியாமல் கொல்கத்தா போலீஸ் திணறி வந்தது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது என்னவெனில், 'நீதிபதி கர்ணன் விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால், அவர் காளஹஸ்திக்கு தான் சென்றார் என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை' என்றனர்.
இந்நிலையில், தனது கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில், "நீதிபதி கர்ணன் சென்னையில் தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை. நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவரை கர்ணன் சந்திக்க உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.