சாலை விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து; அதிரடி உத்தரவு

சென்னையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, போக்குவரத்து செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின், போக்குவரத்து ஆணையர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,

*வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கை தாண்டுதல், குடிபோதையில் இயக்குதல், செல்போன் பயன்படுத்துதல், அதிக பாரம் ஏற்றுதல் / சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல் போன்ற விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

*உயிரிழப்பு ஏற்படுத்திய ஓட்டுனர்கள், உரிமங்கள் திரும்பப் பெறுவதற்கு முன் 2 நாள் புத்தாக்க பயிற்சியினை சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.

*இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.

*தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2 மணி நேரம் விழிப்புணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.

*தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் ரோந்துப் பணி மேற்கொண்டு, நடைபெறும் விபத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

*அரசு துறைகளின் சீரமைப்பு பணிகள் நடைபெறும் போது வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

*மூன்றாம் நபர் காப்பீட்டுச் சான்றிதழ் (Third Party Insurance) இல்லாமல் இயங்கும் வாகனங்கள் சிறை பிடித்து, உரிய சான்றிதழ் வழங்கிய பின்னர் விடுவிக்கலாம்.

*வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது என நம்புவோம். சாலை விதிகளை மதித்து செயல்பட்டாலே பல உயிர்ச் சேதங்களை தவிர்க்கலாம் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட சாலை விதிகளை மதிக்காததால் ஏற்பட்ட சில விபத்துகள் அடங்கிய வீடியோவை இங்கே பார்ப்போம்.

×Close
×Close