அரசு வேலைக்கு பயிற்சி அளிப்பதாவும் அதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் ரூ.200 கூகுள் பேவில் பணம் செலுத்த வேண்டும் என புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவன் பெயரில் செய்யாறு தாலுக்காவில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களைக் குறிவைத்து போலி கடிதம் அனுப்பி அடையாளம் தெரியாத ஒரு மோசடி கும்பல் பணம் பறிக்க களம் இறங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்காவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு புதுடெல்லி சாஸ்திரி பவன் என்று குறிப்பிடப்பட்டு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அஞ்சல் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தென்னிந்திய மாவட்டங்கள் வளர்ச்சி ஆணையம், பிரதான் மந்திரி கௌஷல் யோஜனா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் கிராமப்புற டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணி ஆள்சேர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதில் உங்களுடைய கிராமப் பஞ்சாயத்தும் ஒன்று என்று நாங்கள் பெருமையுடன் தகவல் தெரிவிக்கிறோம்.
தென்னிந்திய மாவட்டங்கள் வளர்ச்சி ஆணையத்தின் கீழ் (South India Districts Development Authority - SIDDA) கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு அதற்கு மேல் படித்தவர்கள் தகுதியுள்ளவர்கள். உள்ளூர் மொழியில் தகவல் தொடர்பு தெரிந்திருக்க வேண்டும், 20 வயது முதல் 40 வயது வரையிலான உள்ளூரில் வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள்.
விண்ணப்பதாரர் உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் இருந்து பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர்கள் கீழே கூறப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இந்த விண்ணப்பதாரர்களுக்கு பி.எம்.ஆர்.டி.இ. பணிகள் தென்னிந்திய மாவட்டங்கள் வளர்ச்சி ஆணையத்துடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்களில் ஒரு மாதம் பயிற்சியை நடத்தும். பயிற்சிக் காலத்தில் தென்னிந்திய மாவட்டங்கள் வளர்ச்சி ஆணைய - SIDDA அவர்களுக்கு தங்குவதற்கு விடுதி வசதி வழங்கும், ஆனால் ஊக்கத்தொகை வாங்கப்படாது. திருப்திகரமாக பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்களுடைய மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமப் பஞ்சாயத்தில் மாதம் ரூ.22,000 ஊதியத்தில் பிரதான் மந்திரி ரூரல் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராக நியமனம் செய்யப்பட்டிருப்பார்.
இந்த விண்ணப்பதாரர் உங்களுடைய கிராமப் பஞ்சாயத்தை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின்னஞ்சல் செய்வதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200 மட்டும் கூகுள் பே மூலம் (9703917540) என்ற என்னுக்கு அனுப்பிவிட்டு radhakrishnanvddy14@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.09.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும். நாங்கள் இதனுடன் விண்ணப்ப படிவம் மாதிரியை அனுப்புகிறோம். விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, மேலும் விவரங்கள் தொடரும். இந்த வாய்ப்பை உங்களுடைய கிராமப் பஞ்சாயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாஸ்திரி பவன், புதுடெல்லி 110015 என்று முத்திரையிடப்பட்டு தங்கள் உண்மையுள்ள என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற செய்யாறு தாலுகாவில் உள்ள பல கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலரை கலந்தாலோசிக்காமல் உடனடியாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு, கூகுள் பே மூலம் ரூ.200 செலுத்தி உள்ளனர்.
புதுடெல்லி சாஸ்திரி பவன் பெயரில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம் நிறைய எழுத்துப் பிழை, தகவல் பிழைகள் உடன் உள்ளது. இந்த கடிதத்தைப் படிக்கும் விவரம் அறிந்த எவரும் இது ஒரு போலியான மோசடி செய்ய திட்டமிட்டு அனுப்பப்பட்ட கடிதம் என்று அறிய முடியும்.
முதல் விஷயம் புதுடெல்லியில் இருந்து சாஸ்திரி பவன் நேரடியாக ஊராட்சி மன்றத் தலைவர்களைத் தொடர்பு கொள்ளாது. இரண்டாவது, புது டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனின் அஞ்சல் குறியீடு என் 110001 ஆகும். ஆனால், இந்த கடிதத்தில் 110015 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான மந்திரி கௌஷல் யோஜனாவை RMKVY என்று குறிப்பிட்டுள்ளார்கள். எந்த அரசு அலுவலகமும் விண்ணப்ப கட்டணத்தை கூகுள் பே எண் கொடுத்து அதன் மூலம் செலுத்துங்கள் என்று கூறாது.
ஒரு போலியானது என்பதை விவரம் அறிந்த எவரும் உடனடியாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த கடிதம் ஏகப்பட்ட இந்த கடிதம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கிடைக்கப்பெற்று அரசு அதிகாரிகளிடம் விசாரித்ததில், இந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூகுள் பே எண் 9703917540, இதை கூகுள் பேவில் பதிவிட்டால் முரளிதர் மலையனூர் (Muralidhar malayanur) என்று காட்டுகிறது. அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ள முயன்றால் அழைப்பு செல்லவில்லை. மேலும், விண்ணப்பங்களை radhakrishnanvddy14@gmail.com ஒரு தனியார் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கேட்கமாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், விண்ணப்பத்தில், சாஸ்திரி பவன் (Shastri Bhavan) என்பதை Shstri Bhavan என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இது ஒரு போலியான, மோசடி செய்வதற்காக அடையாளம் தெரியாத மர்ம நபரால் திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதம் என்பது தெரிகிறது.
பிரதான் மந்திரி கிராமப்புற டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பயிற்சி அளிப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்று, செய்யாறு தாலுக்காவில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு புது டெல்லி சாஸ்திரி பவன் பெயரில் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதம் குறித்து, தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பொது தனி உதவியாளருக்கு போனில் அழைத்து கேட்டோம். இந்த கடிதம் குறித்து கிராமப்புற வளர்ச்சி உதவி இயக்குனர் (ஏ.டி பஞ்சாயத்து) அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று கூறினார்.
நாம் உடனடியாக செய்யாறு வட்டார ஏ.டி பஞ்சாயத்து அதிகாரியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், இது போல, நேரடியாக புது டெல்லி சாஸ்திரி பவனில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்ப மாட்டார்கள். அரசு வேலை பயிற்சி எதுவாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - வட்டார வளர்ச்சி அலுவலகம் என உரிய வழியாகத்தான் தெரிவிக்கப்படும் அனுப்பப்படும். இது போல புது டெல்லி சாஸ்திரி பவனில் இருந்து பிரதான் மந்திரி கிராமப்புற டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. இதைப் போல தகவல் எதுவும் வரவில்லை. இந்த கடிதம் போலியானது என்று கூறினார். சிலர், இதுபோல, கடிதம் அனுப்பி மோசடி செய்கிறார்கள். இது ஒரு போலியான கடிதம், மோசடியான கடிதம் என்று கூறினார்.
மேலும், இந்த கடித விவகாரம் குறித்து நீங்கள் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேளுங்கள் என்று கூறினார்.
இந்த போலி கடிதம் குறித்து செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து விவரம் கேட்டோம்.
புது டெல்லி சாஸ்திரி பவனில் இருந்து, பிரதான் மந்திரி கிராமப்புற டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பயிற்சிக்கு விண்ணப்பிக்க செய்யாறு வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு கடிதம் வந்துள்ளதாக சிலர் என்னிடம் விண்ணப்பத்தை வந்து காட்டினார்கள். இது மாதிரி கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல்தொடர்பு எதுவும் இல்லை. இது ஒரு போலியான, மோசடி கடிதம். ஊராட்சி மன்றத் தலைவர்கள் இது போன்ற போலியான கடிதத்தை நம்ப வேண்டாம். இது போல, ஒரு போலியான, மோசடியான கடிதம் செய்யாறு வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறித்து எங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு வாய்மொழி வழியாக கவனத்துக்கு கொண்டு செல்வேன். இந்த கடிதம் முற்றிலும் பொய்யானது என்று கூறினார்.
ஒவ்வொரு நாளும் மோசடி பேர்வழிகள் புதுப் புது நூதன மோசடி வழிகளைக் கண்டுபிடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வரிசையில், புது டெல்லி சாஸ்திரி பவனில் இருந்து, பிரதான் மந்திரி கிராமப்புற டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று செய்யாறு வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களைக் குறிவைத்து, அடையாளம் தெரியாத மோசடி பேர்வழிகள் கடிதம் அனுப்பி வலைவிரித்திருக்கிறார்கள். இந்த போலியான, மோசடி கடிதத்தை நம்பி சில ஊராட்சி மன்றத் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலந்து ஆலோசிக்காமல் கூகுள் பே மூலம் ரூ. 200 அனுப்பிவிட்டு, விண்ணப்பத்தை அதில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ஏமாந்திருக்கிறார்கள். இனி மேலும், இது போன்ற மோசடிகள் தொடரக் கூடாது என்றால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இது குறித்து, பொதுமக்கள் மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மத்தியிலும் எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.