Advertisment

அதிமுக தலைமைக் கழகத்தை கைப்பற்ற மும்முரம் : எடப்பாடியுடன் மோதும் டிடிவி.தினகரன்

போயஸ் கார்டன் இல்லத்தை விட்டுக் கொடுத்ததுபோல, அதிமுக தலைமைக் கழகத்தை விட்டுக் கொடுக்க முடியாது என டிடிவி.தினகரன் தரப்பினர் அதிரடியாக கிளம்புகிறார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிமுக தலைமைக் கழகத்தை கைப்பற்ற மும்முரம் : எடப்பாடியுடன் மோதும் டிடிவி.தினகரன்

போயஸ் கார்டன் இல்லத்தை விட்டுக் கொடுத்ததுபோல, அதிமுக தலைமைக் கழகத்தை விட்டுக் கொடுக்க முடியாது என டிடிவி.தினகரன் தரப்பினர் அதிரடியாக கிளம்புகிறார்கள். டிடிவி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெரும் படையாக அவர் செல்லவிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.

Advertisment

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக பிரிந்தாலும், களத்தில் நேருக்கு நேராக நின்று மோதும் சூழலை பெரும்பாலும் இந்த அணியினர் தவிர்த்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஒ.பன்னீர்செல்வம் அன்று முதல் இன்று வரை, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக முகவரி தாங்கிய லட்டர் பேடுகள் மூலமாகவே அறிக்கை விடுகிறார். ஆனால் ஆதரவாளர்களுடன் தலைமைக் கழகம் வரும் முயற்சியை ஒரு முறைகூட அவர் எடுக்கவில்லை.

காரணம், அப்படியொரு முயற்சி எடுத்தால் தொண்டர்கள் இடையே அடிதடி-மோதம் உருவாகும். அது மட்டுமின்றி, ஆட்சியை கைவசம் வைத்திருப்பவர்களுடன் அப்படி நேரடியாக மோதுவதால் ஏற்படும் விளைவை அறிந்தவர் அவர். அதேபோல, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரனை, கட்சியில் இருந்து ஒதுக்குவதாக சில மாதங்களுக்கு முன்பே அமைச்சர் ஜெயகுமார் மீடியாவை கூட்டி அறிவித்தார். கடந்த 10-ம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அதை தீர்மானமாகவும் நிறைவேற்றினர்.

publive-image அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதன்பிறகு டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நான். என்னை கட்சி அலுவலகத்திற்கு வரக்கூடாது என சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. தேவையான நேரத்தில் நான் செல்வேன்’ என்றார். டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், ‘ஒரு பொன் மாலைப் பொழுதில் டிடிவி.தினகரன், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்.’ என குறிப்பிட்டார்.

டிடிவி.தினகரனின் மற்றொரு தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ., கடந்த 10-ம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘என்னை கட்சி அலுவலகத்திற்கு வர முடியாது என கூறினார்கள். அதனால்தான் வந்துவிட்டு போகிறேன்’ என தெரிவித்தார்.

ஆனால் டிடிவி.தினகரன் மதுரை மேலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய பிறகும், கட்சி அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை. அவரும் சட்டம் -ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டே பொறுத்திருந்ததாக தெரிகிறது. ஆனால் கடந்த 2 நாட்களாக டிடிவி.தினகரனை சந்திக்கும் அவரது ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்றும்படி அவரை உசுப்பேற்றி வருகிறார்கள்.

publive-image டிடிவி.தினகரன்

இது குறித்து டிடிவி.தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அதிமுக பொதுக்குழு மூலமாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் சசிகலா. அவரை பொதுக்குழுவை கூட்டாமல் நீக்க முடியாது. தேர்தல் ஆணையம் அவரது தேர்வு செல்லாது என அறிவிக்கும் வரை, அவர்தான் பொதுச்செயலாளர். அதேபோல அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளரையும் இவர்களால் நீக்க முடியாது.

பொதுச்செயலாளர் செயல்பட முடியாத சூழலில், துணைப் பொதுச்செயலாளர்தான் கட்சியை நடத்த வேண்டும். ஆனால் ஆட்சியும் போலீஸும் தங்கள் கையில் இருக்கும் தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டிடிவி.தினகரனை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.

இப்படித்தான் சசிகலாவின் நிர்வாகத்தில் இருந்த போயஸ் கார்டன் இல்லத்தை யாரிடமும் கேட்காமல், போலீஸை அனுப்பி கையகப்படுத்தியிருக்கிறார்கள். போயஸ் கார்டன் இல்லத்திற்கு சசிகலா உரிமை கோர முடியாது என்பதை நாங்கள் அறிவோம். அதேசமயம் அங்கு தனது உடமைகளை வைத்துவிட்டு சிறைக்கு சென்றிருப்பவருக்கு அதை காலி செய்ய அவகாசம் கொடுக்க வேண்டாமா?

ஆனால் அதைப் போலவே தலைமைக் கழகத்தையும் அதிகார பலத்தை வைத்து ஆக்கிரமிக்க எடப்பாடி தரப்பை விடக்கூடாது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். ஆகஸ்ட் 21-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையில் அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்களுடன் அங்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம். துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி.தினகரனும் எங்களுடன் வருவார்.

அவரை துணைப் பொதுச்செயலாளர் இல்லை என யாரும் கூற முடியாது. ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, அவரது பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எங்களிடம் ஆதாரமாக இருக்கிறது. கடந்த 10-ம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் நிறைவேற்றிய தீர்மானத்தில்கூட, அவரை நீக்கியதாக கூறவில்லை. ‘அவர் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது’ என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள். காரணம், அவரை நீக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.

ஒருவேளை எங்களை போலீஸ் அதிகாரிகள் மூலமாக தடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் வழக்கு தொடருவோம். இந்தப் பிரச்னையை சும்மா விடப்போவதில்லை” என்றார் அவர் ஆவேசமாக!

ஆதரவாளர்கள் பலரும் டிடிவி.தினகரனிடமும் இதே ரீதியிலேயே கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரும் இது குறித்து சீரியஸாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் விவாதித்து வருகிறார். சில நபர்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கும் இதை கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அணிகள் இணைப்பு நெருங்கி வரும் இந்தச் சூழலில் டிடிவி.தினகரனை எந்த ரூபத்திலும் கட்சி அலுவலகத்திற்குள் விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

டிடிவி.தினகரனுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் வழிகாட்டுதல் படியே அவர் உடனடியாக உள்ளே நுழைவாரா? என்பது முடிவாகும். ஆனாலும் அடுத்த மோதல், தலைமைக் கழகத்தை மையமாக வைத்தே அரங்கேறும் என தெரிகிறது.

V K Sasikala O Panneerselvam Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment