திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி என்பது ஏற்கனவே உள்ளதுதான் எனவும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருவாய் கிடைப்பதாகவும், அந்த வரியை ரத்து செய்ய முடியாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்ததையடுத்து, பேச்சுவார்த்தைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படங்களுக்கு 28% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழக அரசு கேளிக்கை வரி என 30% வரியை அறிவித்தது திரையுலகினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதனால், குறுகிய பட்ஜெட் திரைப்படங்கள் பாதிக்கப்படும் எனவும், லட்சக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்த்து வந்தனர். இதனால், கடந்த திங்கள் கிழமை முதல் இன்று வரை 4 நாட்களாக மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேளிக்கை வரி 30%-ஐ ரத்து செய்யக்கோரி கடந்த திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கேளிக்கை வரி ரத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளதுதான் எனவும், ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை இரட்டை வரியாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரியை ரத்து செய்ய இயலாது என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து இன்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதில் தான் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வீரமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
4 நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கேளிக்கை வரி ரத்து இல்லை என எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கூறியிருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்துள்ளது.
இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, ”மாலையில் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் தங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு மேலும் அழுத்தம் தருவோம்”, என தெரிவித்தார்.