பாறைகளுக்கு மத்தியில், உயிரை பணயம் வைத்து எடுக்கப்படும் மலைத்தேன்; இந்த ஆண்டு வரத்து குறைவு
பாறை விளிம்பில் இருந்து கீழ் நோக்கி 150 - 200 அடி பள்ளத்தில் பாறை இடுக்குகளில் இருக்கும் கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக பிரத்யேக உள்நாட்டு செடிகள் மற்றும் பிரம்புகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
annual cliff honey hunting : தமிழகத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் நீலகிரி மலைப் பகுதிகளில் பழங்குடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதி துவங்கி ஜூன் மாத ஆரம்பம் வரை மலைகள், பாறை இடுக்குகளில் இருக்கும் தேன் கூடுகளில் இருந்து தேன் எடுக்க செல்வதுண்டு.
Advertisment
ஆதி காலத்தில் காட்டு நாயக்கர்கள், குறும்பர்கள் மற்றும் இருளர்களின் உணவு வேட்டை பழக்கங்களில் மிக முக்கியமாக இருந்தது தேன் எடுக்கும் தொழில். காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டாலும், தேன் எடுக்கும் தொழிலை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகின்றனர்.
தேன் கூட்டிற்கும், தேனீகளுக்கும் பெரிய வகையில் இடையூறு இல்லாமல் தேன் எடுக்கும் பழக்கத்தையும் மரபையும் கொண்ட இம்மக்களின் உழைப்பால் ஆண்டுக்கு 8 டன் வரை தேன் இப்பகுதியில் கிடைக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் பேசிய குறும்பர் பழங்குடி சந்திரன் கூறினார்.
நாங்கள் தேன் கூடுகளுக்கு தீவைப்பதோ அல்லது மொத்தமாக வெட்டி எடுப்பதோ கிடையாது. தேன் கூட்டில் தேனீயின் லார்வாக்கள் தங்கி இருக்கும் ”ப்ரூட்” பகுதியை நாங்கள் தொந்தரவு செய்வது இல்லை. கீழே இருக்கும் பகுதியை மட்டும் தான் நாங்கள் வெட்டி எடுப்போம். மொத்தமாக தேன் கூட்டை கலைத்தால், அடுத்த ஆண்டும் மீண்டும் அதே இடத்தில் தேனீக்கள் கூடு கட்டுவதற்கான சாத்தியங்கள் குறைவு. மேலும் இப்படியாக விட்டுச் செல்லும் பட்சத்தில் மூன்று அல்லது நான்கு முறை நாங்கள் அந்த பகுதியில் இருந்து தேனை பெற்றுக் கொள்வோம் என்று கூறினார் சந்திரன்.
தொட்டபெட்டா மலைச்சிகரங்களுக்கு கீழே இருக்கும் வனப்பகுதியில், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுக்காவில் இருக்கும் மலைச்சிகரங்களில் தேன் சேகரிக்கும் பணியில் இந்த மலை குடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சேகரிக்கும் தேன், நீலகிரி சுற்றுலா வருமானத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேன் மகசூலில் மாற்றங்கள் ஏற்படும். ஒரு ஆண்டு தேன் அதிகமாக கிடைத்தால் அடுத்த ஆண்டு தேன் குறைவாக கிடைக்கும். ஆதிமலை என்ற அமைப்பின் கீழ் குறும்பர்கள் தாங்கள் சேகரிக்கும் தேனை விற்பனைக்கு வைக்கின்றனர். 1600க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.
“கடந்த ஆண்டு 40 முதல் 50 கூடுகள் இருந்த இடத்தில் இந்த ஆண்டு 2 அல்லது மூன்று தேன் கூடுகளே இருக்கின்றன. மற்ற ஆண்டுகளில் இப்படியான குறிப்பிட்ட பகுதியில் இருந்து எடுக்கப்படும் தேனின் அளவே 300 கிலோ முதல் 400 கிலோ வரை இருக்கும். இந்த ஆண்டு குறைவாக இருக்கும். அடுத்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும்” என்று சந்திரன் நம்மிடம் தெரிவித்தார்.
தேன் எடுக்கும் போது சில முக்கியமான விசயங்களை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர் இம்மக்கள். குடித்துவிட்டு இந்த பணிக்கு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டை அனைவரும் கட்டாயமாக கடைபிடித்து வருகின்றனர். பாறை விளிம்பில் இருந்து கீழ் நோக்கி 150 - 200 அடி பள்ளத்தில் பாறை இடுக்குகளில் இருக்கும் கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக பிரத்யேக உள்நாட்டு செடிகள் மற்றும் பிரம்புகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் தேனீ வளர்ப்பில் அதிகமாக பரிந்துரை செய்யப்படுவது அபீஸ் மெல்லிஃபெரா (Apis mellifera) என்ற தேன் இனமாகும். தேனீ வளர்ப்பிற்காகவே அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஐரோப்பிய வகை தேனீக்களால், நாட்டு தேனீ வகைகள் உணவு தேவைக்காக பெரிதும் போராட வேண்டிய நிலை உள்ளது. பாறைகளில் வளரும் அபிஸ் டோர்சட்டா (A. dorsata) மற்றும் இந்திய தேனீ என்று வழங்கப்படும் A. cerana indica தேனீக்களை வளர்க்கவும், மக்களிடம் அறிமுகம் செய்யவும் அரசு உதவ வேண்டும் என்று பல தரப்பிடம் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் கீஸ்டோன் ஃபவுண்டேஷனின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ”பொதுவாக அபிஸ் செரானா, அபிஸ் ஃப்ளோரா மற்றும் தம்மெர் தேன் கூடுகளில் இருந்து தேன் எடுக்க காலை நேரங்களை தேர்வு செய்கின்றனர் பழங்குடிகள். ஆனால் அபிஸ் டோர்சட்டா வகை தேனீக்களின் கூட்டில் இருந்து எடுப்பது இரவுகளில் தான் பெரும்பாலும் நடைபெறுகிறது. மாலை 06:30 மணிக்கு துவங்கினால் அதிகாலை 05:30 மணி வரை தேன் எடுக்கும் நிகழ்வு நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil