கதிராமங்கலத்தில் கைதான 9 பேருக்கு ஜாமீன்: பேராசிரியர் ஜெயராமனுக்கு மறுப்பு!

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரில், பேராசிரியர் ஜெயராமனைத் தவிர மீதமுள்ள 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி தஞ்சை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து, நாகை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் பணியை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதாக கூறி, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதிக்கும் வேலைகளில் ஈடுபட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தங்கள் கிராமத்தில் மீத்தேன் திட்டம், பாறை படிம எரிவாயு எனப்படும் ஷெல் கேஸ் திட்டம் ஆகியவற்றை மறைமுகமாக செயல்படுத்த முனைவதாகவும், அதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி, எரிபொருள் குழாயில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், அப்பகுதியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, அரசு அதிகாரியை பணிகள் செய்யவிடாமல் தடுத்தல், அவர்களை அச்சுறுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு முழுவதுமாக வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேரில், பேராசிரியர் ஜெயராமனைத் தவிர மீதமுள்ள 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி தஞ்சை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜெயராமன் மீது பல வழக்குகள் உள்ளதால் அவர் தற்போது சிறையிலிருந்து வெளிவர முடியாது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஓஎன்ஜிசி பொருட்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஜெயராமனுக்கு ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. ஆனால், மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close