நிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.

நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி கணிதத் துறை பேராசிரியை! கல்லூரி மாணவிகளை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு விருந்தாக்குவதற்காக ஆசை வார்த்தை கூறி இவர் நடத்திய உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என்றும் ஒரு இடத்தில் நிர்மலா தேவி குறிப்பிட்டார்.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தன் பங்குக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இரு விசாரணை அமைப்புகளும் இன்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் விசாரணைக் களத்தில் குதித்தன.

சிபிசிஐடி சார்பில் எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் இன்று விசாரணை நடத்தினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி தலைவர், துணைத் தலைவர், முதல்வர் உள்ளிட்டோரிடம் முதல் கட்ட விசாரணையை சிபிசிஐடி போலீஸார் நடத்தினர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் சுமார் 3 மணி நேரம் இன்று சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நடந்தது. குறிப்பாக அங்கு துணைவேந்தர் செல்லத்துரையின் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினார்கள். அவற்றை ஆய்வு செய்து விசாரிக்க இருக்கிறார்கள்.

ஆளுனரால் நியமிக்கப்பட்ட அதிகாரி சந்தானம் இந்த விசாரணையில் தனக்கு உதவும் வகையில் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலியை தேர்வு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் சந்தானம் சார்பில் அவரே விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம் குழு சார்பிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையிடம் இன்று விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய செல்லத்துரை, ‘சந்தானம் குழு கேட்கும் தகவல்களை கொடுப்போம். தேவைப்பட்டால் சிசி டிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்குவோம்’ என்றார்.

இரு விசாரணை அமைப்புகளும் போட்டி போட்டு விசாரணைக் களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

×Close
×Close