நிர்மலா தேவி விவகாரம் : மாநில அரசுக்கும், ஆளுனருக்கும் அதிகாரப் போட்டியா?

நிர்மலா தேவி விவகாரம், மாநிலத்தின் நிர்வாகம், ஆளுனர் உரிமை தொடர்பாக பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.

ச.செல்வராஜ்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஒரே நேரத்தில் 2 விசாரணை அமைப்புகள் களத்தில் குதித்திருப்பது உண்மையை வெளிப்படுத்துமா? அல்லது, குழப்பத்தை உருவாக்குமா?

நிர்மலா தேவி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் கணிதத் துறை உதவிப் பேராசிரியை! அந்தக் கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் வலை விரிக்கும் வகையில் இவர் பேசிய ஆடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்மலா தேவி தனது ஆடியோ பேச்சில், ‘கவர்னர் தாத்தா இல்லை’ என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காகவே மாணவிகளுக்கு அவர் வலை விரிப்பதாக அந்த உரையாடல் மூலமாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் மீதும் சந்தேகம் கிளம்பியதால், அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கை விட்டனர். ஆனால் ஆளுனரோ, அவராகவே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் அமைத்திருக்கிறார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நிர்மலா தேவி மற்றும் சில மாணவிகள் தொடர்பான இந்த பாலியல் விவகாரத்தை ஒரு ஆண் அதிகாரி எப்படி விசாரிக்க முடியும்? பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரங்களை விசாரிக்கும் முழுவில் பெண்கள் இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருக்கிறதே? இந்தக் கேள்விகளை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடமே செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்டனர். ஆனால் ஆளுனர், ‘விசாரணைக் குழுவுக்கு பெண்கள் தேவைப்பட்டால், ஆணையர் பயன்படுத்திக் கொள்வார்’ என முடித்துக் கொண்டார்.

ஆளுனர் நியமித்திருக்கும் இந்த விசாரணை ஆணையம் ஆளுனர் மற்றும் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மீதான சந்தேகங்களை போக்க முடியுமா? என்பது பெரிய கேள்வி! இன்னொரு புறம், தமிழக போலீஸ் துறை இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக இன்று (ஏப்ரல் 19) செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆளுனரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானமும் இன்று விசாரணைப் பணியில் இறங்கினார். மதுரை வந்து இறங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘விசாரணைக்கு தேவைப்பட்டால், பேராசிரியைகளை பயன்படுத்திக் கொள்வேன்’ என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை முதல் கட்டமாக அவர் சந்தித்து பேசினார்.

நிர்மலா தேவி விவகாரத்தில் 15 நாட்களில் தனது அறிக்கையை ஆளுனரிடம் சமர்ப்பிக்க இருப்பதாக ஆர்.சந்தானம் கூறினார். அந்த அறிக்கையை மீடியாவிடம் வெளிப்படையாக பகிர இருப்பதாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பிலேயே ஆளுனர் குறிப்பிட்டார். சிபிசிஐடி விசாரணை அதற்குள் முடியுமா? என்று தெரியவில்லை.

சந்தானம் அறிக்கை ஒரு திசையிலும், சிபிசிஐடி விசாரணை இன்னொரு திசையிலும் அமைந்தால் எந்த அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியும்? உதாரணத்திற்கு, சிபிசிஐடி விசாரணையில் பல்கலைக்கழக அதிகாரிகள் சிலரை குற்றவாளிகளாக அடையாளம் காணும் பட்சத்தில், சந்தானம் கமிஷன் அவர்களுக்கு ‘நற்சான்றிதழ்’ வழங்கினால் என்ன செய்வது?

நிர்மலா தேவியின் ஆடியோவை சந்தானம் ஆணையம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமா? நிர்மலா தேவியால் வலை விரிக்கப்பட்ட மாணவிகளை சந்தானம் ஆணையம் தனியாகவும், சிபிசிஐடி தனியாகவும் விசாரிப்பது குழப்பத்தை உருவாக்காதா? சந்தானம் ஆணையம், ‘இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என முடிவு செய்துவிட்டால், அதன்பிறகு சிபிசிஐடி விசாரணையே கேலிக் கூத்தாகிவிடாதா? இப்படி பல கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுகின்றன.

ஆளுனர் என்பவர் பலகலைக்கழக வேந்தர்தான்! அதற்காக ஒரு கல்லூரி பேராசிரியை தொடர்பான விவகாரத்தில் அவரே மாநில அரசை முந்திக்கொண்டு ஒரு விசாரணை ஆணையம் அமைப்பது சரியானதா? என்கிற கேள்வியும் இருக்கிறது. உயர் கல்வித் துறையை முழுக்க ஆளுனரே நிர்வாகம் செய்வார் என்றால், பிறகு எதற்கு அந்தத் துறைக்கு ஒரு செயலாளர், ஒரு அமைச்சர், இவர்களுக்கு மேல் ஒரு முதல் அமைச்சர்?

மக்களாட்சி ஜனநாயகத்தில் முதல்வரோ, துறை அமைச்சரோ அந்தத் துறைக்குட்பட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டுமா? அல்லது ஆளுனரே முடிவு எடுக்க வேண்டுமா? இன்று வேந்தர் என்ற முறையில் உயர் கல்வித் துறையில் விசாரணைக்கு (அதுவும், அவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில்) உத்தரவிடும் ஆளுனர், நாளைக்கு அரசமைப்புச் சட்டப்படி மாநில நிர்வாகத் தலைவர் என்ற அடிப்படையில் எல்லாத் துறைகளிலும் தலையிட்டால் அது சரியாக இருக்குமா?

மாநில அமைச்சரவையின் முடிவுகளைக் கேட்டு, அதன்படி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியவர் என்கிற சட்ட, மரபு நடைமுறையை இதில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உடைப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின்போது ஆளுனர் உரை வாசிக்கப்படும். அரசு தயாரித்துக் கொடுக்கும் உரைதான் அது! இனி அந்த உரையையும் ஆளுனரே தயாரிக்கும் நிலை வரலாம்.

நிர்மலா தேவி விவகாரம், மாநிலத்தின் நிர்வாகம், ஆளுனர் உரிமை தொடர்பாக பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. ஆளுனருக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான அதிகார போட்டியாகவும் இந்த விவகாரம் உருப் பெறுவதாக தெரிகிறது. ஏற்கனவே காவிரி போராட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு ஆளுனர் தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்ததாகவும், அதற்கு பதிலடியாக அரசு தரப்பு இந்த ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்து ‘செக்’வைப்பதாகவும் அதிகார வட்டாரங்களில்  ஒரு பேச்சு இருக்கிறது.

மாநில சுயாட்சி முழக்கத்திற்கு வித்திட்ட தமிழகத்தில் இந்த நிலை கிளம்புவதுதான் சோகம்!

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close