Nirmala-sitharaman | vijayakanth: நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், விஜயகாந்த் மறைந்த செய்தியை கேட்டவுடன் உடனடியாக சமூக வலைதளங்களில் செய்தி போடுவதை தாண்டி மத்திய அரசின் சார்பில் துக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று கூறி என்னை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார்.
மனதுக்கு வருத்தமளிக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமரின் சார்பாக மலர்வளையத்தை சமர்ப்பித்தேன். விஜயகாந்த் இளகிய மனம் படைத்தவர் மட்டுமல்ல மனிதநேயம் மிக்க அரசியல் தலைவர். கேப்டன் தனது வீட்டிற்கு வந்தவர்கள் யாரையும் சாப்பிடாமல் திருப்பி அனுப்பியது கிடையாது.
மற்றவர்களின் கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால்தான் அவருக்கு கிடைத்த அனைத்து வசதிகளும் மற்றவருக்கும் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஒரு நேர்காணலில் கேப்டன், 'நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைத்தான் என்னுடன் வேலை செய்யும் மற்றவர்களும் சாப்பிட வேண்டும்' என்று கூறுவார். அதனால்தான் தற்போது புது பழக்கமே உருவாகி இருக்கிறது. அப்படி மனித நேயமிக்க மனிதர்.
அந்த மாதிரியான ஒரு குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லை. அந்த துக்கத்தை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லை. அவரை கடைசியாக பார்க்க விரும்பும் கோடான கோடி தொண்டர்களுக்கும் என்னுடைய துக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“