வாஜ்பாயை மறந்துவிட்ட மோடி அரசு, வாஜ்பாய் கொள்கையை பின்பற்றுமா? என என்.எல்.சி தனியார் மய விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி விடுத்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று சிறப்பாக இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்திற்கும் தென் மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கி, மிகப்பெரிய வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
1956 இல் என்.எல்.சி. நிறுவனம் நிறுவப்பட்டதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2016-2017 நிதி ஆண்டில் ரூ.2342.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிலக்கரி வெட்டி எடுத்தல், அனல்மின் உற்பத்தி போன்றவற்றில் 14.4 விழுக்காடு வளர்ச்சி பெற்று இருக்கிறது. மின் உற்பத்தியில் சிறப்பான இடம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் அனல் மின்சார உற்பத்தித் திறன் 4240 மெகாவாட் ஆகும்.
மரபு சாரா எரிசக்தித்துறையிலும் சாதனை நிகழ்த்தும் வகையில் சூரிய ஒளி மின்உற்பத்தி 10 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தி 51 மெகாவாட் என்.எல்.சி. மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் 4301 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் படைத்துள்ள என்.எல்.சி. 2025 ஆம் ஆண்டில் 20971 மெகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இத்தகைய சிறப்புடன் தன்னிகரற்று விளங்கும் பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை 15 விழுக்காடு விற்பனை செய்வதற்கு நரேந்திர மோடி அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
முதற்கட்டமாக 5 விழுக்காடு பங்குகளை இன்று ( அக்டோபர் 25) முதல் விற்பனை செய்யவும், அதன் மூலம் 800 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கடந்த ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பெருமையுடன் கூறி இருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது.
‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்டப் இந்தியா’ என்று தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களை கூவிக் கூவி அழைக்கும் மோடி அரசு, சாதனை படைத்து வருகின்ற என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி. போன்ற பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது எதற்காக? லாபம் ஈட்டி வரும் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவது ஏன்?
என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை வாஜ்பாய் அரசு 2002 ஆம் ஆண்டு விற்பனை செய்ய முடிவு எடுத்தபோது, 2002 மார்ச் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அப்போது நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாக என்.எல்.சி. தனியார் மயமாக்கலை எதிர்த்தார்கள்.
பின்னர் பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து என்.எல்.சி. தனியார் மயமாக்கல் திட்டத்தைக் கைவிட வற்புறுத்தினேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வாஜ்பாய், மத்திய அரசின் கொள்கை முடிவையே மாற்றி, என்.எல்.சி. தனியார் மயமாகாது என்று அறிவிப்பு செய்தார். வாஜ்பாயை மறந்துவிட்ட மோடி அரசு, வாஜ்பாய் அரசின் கொள்கையையா பின்பற்றப் போகிறது?
என்.எல்.சி. இந்தியா பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்று போராட்டக் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.