நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் - ஒழுங்கு சீர்கெடாமல் அமைதியான வழியில் போராடலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தெளிவுபடுத்தியதை தொடர்ந்து, வருகிற 13-ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், திமுக சார்பில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பொதுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், நீட் போராட்டம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. அதில், போராட்டம் நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக முதலில் தகவல் வெளியானது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், திமுக பொதுக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே, "சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் உணர்ந்தே இருக்கிறது. அதேசமயம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும், அமைதியான போராட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது" என தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது.
இதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்க்கட்சிகள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில், பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொதுக் கூட்டம் நடத்த ஒருவேளை அனுமதி இல்லையென்றாலும், அதை மீற நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அதற்கு முன்னதாகவே வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தெளிவு படுத்தி விட்டனர். மத்திய - மாநில அரசுகளின் நாடகத்தால் நாம் அனிதாவை இழந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பிள்ளைகளெல்லாம் மருத்துவம் படித்துள்ளனர். இவர்களெல்லாம் நீட் தேர்வா எழுதி வந்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய - மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசிய ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதே இடத்தில போட்டி பொதுக் கூட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். எங்களது கேள்விகளுக்கு அவர் அதில் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
அதேபோல், இரண்டாவது கட்டமாக வருகிற 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தொடர் போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அப்போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.