Advertisment

ஆட்சி கவிழ்ப்பு ஆட்டம் : ஸ்டாலின் - டிடிவி.தினகரன் கை கோர்க்கிறார்களா?

மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சி வேண்டும்; டிடிவி.க்கு கட்சி வேண்டும். இந்த இரண்டுக்கும் இடைஞ்சலாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆட்சி கவிழ்ப்பு ஆட்டம் : ஸ்டாலின் - டிடிவி.தினகரன் கை கோர்க்கிறார்களா?

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் மு.க.ஸ்டாலினும் டிடிவி.தினகரனும் கை கோர்க்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Advertisment

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியையும் கட்சியையும் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ள சசிகலா விரும்பினார். பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக நியமனம் செய்து கொண்ட அவர், முதல்வர் பதவியை ஏற்கவிருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றார்.

சிறைக்கு செல்லும் முன்பு கட்சியை நடத்துவதற்கு வசதியாக டிடிவி.தினகரனை அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தார் அவர். ஆனால் அவரும் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கில் சிக்கி, டெல்லி திகார் சிறைக்கு போக வேண்டியதானது. இதன்பிறகு ஆட்சியும், அ.தி.மு.க. அம்மா அணியும் எடப்பாடி பழனிசாமியின் வசம் வந்தன.

publive-image டிடிவி.தினகரன்

சிறையிலிருந்து வெளியே வந்த டிடிவி.தினகரன், தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி இயங்குவார் என எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து கட்சிக்கு புதிய நிர்வாகிகள், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் என டிடிவி. அதிரடி காட்டினார். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை திரட்டி, ‘டிடிவி.யின் நியமனமே செல்லாது. எனவே அவர் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது’ என தீர்மானம் போட்டார்.

‘தேர்தல் ஆணையத்தில் என்னை துணைப் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு அபிடவிட் கொடுத்தவர்கள், இப்போது இல்லை என சொல்வது செக்‌ஷன் 420 (மோசடிப் பேர்வழிகள்) வேலை’ என டிடிவி பாய்ந்தார். பதிலுக்கு எடப்பாடி, ‘420 என்பது அவருக்குத்தான் பொருந்தும்’ என டிடிவி.யை தாளித்தார். இப்படி குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு அம்மா அணி மோதல் களை கட்டிவிட்டதால், இனி இவர்கள் இணைந்து இயங்கும் வாய்ப்பு குறைவு.

இப்போது டிடிவி கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் இருக்கிறார். அதன் முதல் கட்டம்தான் ஆகஸ்ட் 14-ம் தேதி மேலூர் பொதுக்கூட்டம்! ஆனால் அந்தக் கூட்டத்திலேயே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலரை பங்கேற்க விடாமல் எடப்பாடி தரப்பு சென்னைக்கு கடத்தி வந்துவிட்டதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன.

தவிர, துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும் டிடிவி.க்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆட்சியும் போலீஸும் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டிடிவி.யால் அத்துமீறி நுழையவும் முடியவில்லை. எனவே இனி எடப்பாடி கையில் ஆட்சி இருக்கும் வரை, கட்சியை கைப்பற்றும் முடிவு கானல் நீர்தான் என்கிற முடிவுக்கு டிடிவி வந்திருப்பதாக கூறுகிறார்கள்.

அதன் எதிரொலிதான், ‘ஆட்சியை கவிழ்க்கவே மாட்டேன்’ என முன்பு கூறி வந்த டிடிவி, கடந்த 10-ம் தேதிக்கு பிறகு அப்படி சொல்வதில்லை. ‘அம்மா வழியில் ஆட்சி நடத்துவதைப் பொறுத்தே, இந்த ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா என்பதை கூற முடியும்’ என ஆகஸ்ட் 14-ம் தேதி பேட்டியில் கூறினார் டிடிவி.

இது ஒருபுறமிருக்க, தொடர்ந்து அதிகாரத்தில் இல்லாமல் 6-வது ஆண்டை கடந்திருக்கும் தி.மு.க. இந்த ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வந்து உட்கார தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஓ.பி.எஸ். எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்ப்பார் என எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இப்போது டிடிவி.யை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சி வேண்டும்; டிடிவி.க்கு கட்சி வேண்டும். இந்த இரண்டுக்கும் இடைஞ்சலாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. இந்த ஒரு புள்ளியில் டிடிவி.யையும் மு.க.ஸ்டாலினையும் மீடியேட்டர்கள் சிலர் ஒருங்கிணைத்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது. இருவரும் தொலைபேசியில் பேசிவிட்டதாகவே அதிகாரபூர்வமற்ற அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

எடப்பாடி அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்று ஆகஸ்ட் 20-ம் தேதியுடன் 6 மாதங்கள் ஆகிறது. அதன்பிறகு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரலாம். எனவே அதி விரைவில் திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் என்றும், டிடிவி தரப்பு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்றும் தினகரனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் சொல்கிறார்கள்.

‘திமுகவுடன் கைகோர்த்தால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் டிடிவி.க்கு இருக்கிற ஆதரவும் போய்விடாதா?’ என கேள்வி எழலாம். அதற்கு, ‘முதலில் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை, அதன்பிறகு சாதாரண காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை’ என பதில் சொல்கிறார்கள் டிடிவி தரப்பில்! அதிமுக.வை கைப்பற்றும் ஆசையில் இருக்கும் மற்றொருவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இந்தத் திட்டத்தில் உடன்பாடுதான். எனவே அவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தால், எடப்பாடி அரசுக்கு எதிராகவே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வாக்களிப்பார் என்கிறார்கள்.

வருகிற நாட்களில், எடப்பாடி அரசுக்கு சவால் காத்திருக்கிறது.

O Panneerselvam Ttv Dhinakaran M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment